பாடல் 518 - கயிலைமலை - திருப்புகழ்

ராகம் - தோடி;
தாளம் - கண்டசாபு - 2 1/2
தானந் தனத்ததன தானந் தனத்ததன தானந் தனத்ததன ...... தனதான |
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர் சீரும் பழித்தசிவ ...... மருளூறத் தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ சீவன் சிவச்சொருப ...... மெனதேறி நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி நாதம் பரப்பிரம ...... வொளிமீதே ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ நாளுங் களிக்கபத ...... மருள்வாயே வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன் மாலும் பிழைக்கஅலை ...... விடமாள வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு மானின் கரத்தனருள் ...... முருகோனே தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது தானுண் கடப்பமல ...... ரணிமார்பா தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே. |
நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா, பலா, வாழை) பால், சிவந்த கரும்பு, இள நீர் இவைகளின் இனிப்பின் சிறப்பையும் (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்) தாழ்மைப்படுத்துகின்ற மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப் பெருகவும், தீவினை, நல்வினை முழுவதும் தூள்பட்டு ஒழியவும், இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது என்று நன்கு தெளிந்து, அகங்காரத்தை அடியோடு நீத்தும், உயிர்ப்பற்று, உடற்பற்று இரண்டையும் அகற்றியும், (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள அருள்நாதப் பிரம்மமாம் பரஞ்ஜோதியில் சிவ ஞானம் பெருகிவரவும், மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோட்சத்தில், அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு நின் திருவடியைத் தந்தருள்வாயாக விண்ணுலகு தழைத்து ஓங்கும் பொருட்டும், அடியேனும் சிவநலம் பெற்று உய்வதன் பொருட்டும், பிரம்மாவும், திருமாலும் (சூரனால் அழியாது) வாழும் பொருட்டும், பாற்கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை அழிய (அவ்விஷத்தை) குடிக்க வாரி எடுத்த கரத்தை உடையவரும், எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும், நெருப்பையும், மானையும் ஏந்திய திருக்கரத்தை உடையவருமான சிவபெருமான் பெற்றருளிய முருகக் கடவுளே தானந் தனத்ததனனா என்ற ¡£ங்காரத்துடன் வண்டானது வட்டமிட்டு தேனை உண்ணுகின்ற கடப்ப மலரை தரித்துக் கொள்கிற திருமார்பை உடையவனே (எமைக் காப்பதற்கு) தக்க இடமாகக் குறித்து எங்களை ஆட்கொள்ளவென்றே திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய, வள்ளிநாயகி மகிழ்கின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 518 - கயிலைமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானந், தனத்ததன, பொருட்டும், எங்களை, யாளுந், முக்கனிகள், பெருமாளே