பாடல் 515 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ஹிந்தோளம்
; தாளம் - ஆதி
தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா |
பரமகுரு நாத கருணையுப தேச பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண் பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை பகருமதி காரப் ...... பெருமாள்காண் திருவளரு நீதி தினமனொக ராதி செகபதியை யாளப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மருவையவை பூத தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண் ஒருபொருள தாகி அருவிடையை யூரு முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண் உகமுடிவு கால மிறுதிகளி லாத உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண் கருவுதனி லூறு மருவினைகள் மாய கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண் கனகசபை மேவி அனவரத மாடு கடவுள்செக சோதிப் ...... பெருமாளே. |
பரமசிவனுக்கும் குருநாதனே, கருணையுடன் உபதேசிப்பவனே, அருட் பதவிகளைத் தருகின்ற பெருமாள் நீதான். பகலும் இரவும் அற்றதான ஞான ஒளிவீசும் சிதாகாச வெளியில் மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள் நீதான். முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே, உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான். மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி தரிசனம் தரும் சிவாயநம என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான்*. ஏக வஸ்துவாகி அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற பார்வதியின் மணவாளப் பெருமாளும் நீதான்*. பிரபஞ்சங்களின் யுக முடிவு, காலம், இறுதிகள் என்பவை இல்லாத நிலைபெற்ற சிவாநுபூதியைத் தந்தருளும் பெருமாள் நீதான். கருக்குழியிலிருந்தே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான். பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற* தெய்வமாகின்ற ஜெகஜ்ஜோதியான பெருமாளே.
* சிதம்பரத்து நடராஜனை முருகனாகவே அருணகிரிநாதர் காண்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 515 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாள்காண், பெருமாள், நீதான், தனதனன, நீதான்*, பெருமாளே