பாடல் 516 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தனா தான தானன தந்தனா தான தானன தந்தனா தான தானன ...... தனதான |
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணா ரார வாரமு ...... மருள்வோராய் வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசை யேதரு ...... விலைமாதர் பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு பஞ்சியே பேசி நாடொறு ...... மெலியாதே பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய பண்புசேர் பாத தாமரை ...... யருள்வாயே அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில் அன்றுதா னேவி வானவர் ...... சிறைமீள அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள் அண்டர்கோ வேப ராபர ...... முதல்வோனே கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய கொன்றையா னாளு மேமகிழ் ...... புதல்வோனே கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு குன்றுதோ றாடல் மேவிய ...... பெருமாளே. |
வஞ்சகத்தையே கோடிக் கணக்காய் உள்ளத்தில் சேர்த்து வைத்துள்ள கொடியவர்கள், ஆரவாரத்துடன் அருள் புரிபவர்கள் போல காண்பித்து வீணில் வாது பேசுபவர்கள், கொஞ்சிப் பேசி காம விளையாட்டுகளைப் பற்றிப் புகழ்ந்து, ஆசையை வளர்க்கின்ற பொது மகளிரின் ஐந்து பெரிய பாவங்களுக்கும் இடமாகும் மார்பகங்களின் மேல் அன்பு வைத்து மிக வருத்தம் காட்டிப் பேசி, நான் நாள் தோறும் மெலிந்து போகாமல், வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள் செய்வாயாக. சூரன் பயப்படும்படியும், பிழைத்திராதபடியும் வேலை அன்றைக்கே செலுத்தி, தேவர்கள் சிறையினின்றும் மீள அன்புடன் அவர்களுடைய விருப்பம் நிறைவேற மேலான வாழ்வை அளித்த தேவர்கள் தலைவனே, பராபர முதல்வனே, கொஞ்சுதல் போல, காலில் கட்டியுள்ள சதங்கை ஒலிக்க நடனம் செய்த, கொன்றையை அணிந்த சிவபெருமான் நாள்தோறும் மகிழ்கின்ற பிள்ளையே, பூங்கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய குன்றுகளின் சூழல் உள்ள பழமுதிர் சோலை ஆகிய குன்றுகளில் எல்லாம் வீற்றிருக்கும் பெருமாளே.
* சோலை மேவிய குன்று என்று ஒரு தனித்தலம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை குன்று தோறாடல் அல்லது பழமுதிர்ச்சோலையின் கீழ் வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 516 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மேவிய, தந்தனா, தேவர்கள், பேசி, சோலை, தானன, பொருந்திய, குன்று, அருள், பெருமாளே, வாது