பாடல் 508 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனனா தத்தன தனனா தத்தன தனனா தத்தன ...... தனதான |
பனிபோ லத்துளி சலவா யுட்கரு பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப் படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி பயில்வா ருத்தியில் ...... சிலநாள்போய்த் தனமா தர்க்குழி விழுவார் தத்துவர் சதிகா ரச்சமன் ...... வருநாளிற் றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி தளர்மா யத்துய ...... ரொழியாதோ வினைமா யக்கிரி பொடியா கக்கடல் விகடா ருக்கிட ...... விடும்வேலா விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ மிகவே குட்டிய ...... குருநாதா நினைவோர் சித்தமொ டகலா மற்புகு நிழலாள் பத்தினி ...... மணவாளா நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே. |
பனி போல் அளவுள்ள ஒரு துளி சுக்கிலம் ஜலத் துவார வழியாய்ச் சென்று கரு தரித்து, பத்து மாதக் கணக்கில் தலை கீழாக பூமியில் வந்து பிறந்து, உடல் கொண்டு தவழ்பவராய், தத்தித் தத்தி அடியிட்டு நடை பயில்பவராய், மழலைப் பேச்சில் சில நாட்கள் கழிந்த பின்னர், மார்பகங்கள் மிக்க உடைய பெண்கள் என்னும் காமக் குழியில் வீழ்பவராய், காலத்தைத் தாவிச் செலவிடுவார். வஞ்சனை கொண்டவனாகிய யமன் வருகின்ற அந்த நாளில், நிலைத்திருக்க முடியாதவராய் தமக்கு வீடாகிய உடலை விடுவார். இந்த விதமாக தளர்ந்து ஒழியும் மாயமான துயரம் என்னை விட்டு நீங்காதோ? மாயைத் தொழிலில் வல்ல கிரெளஞ்ச மலை பொடியாக, கடலில் செருக்கு வாய்ந்த அசுரன் சூரன் அழிந்து போக, வேலினைச் செலுத்தியவனே, பிரமனை, நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டிய குருநாதனே, நினைத்துத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய பத்தினி வள்ளியின் கணவனே, இந்தப் பூமிக்கு நிதி போன்றதான புலியூரில் (சிதம்பரத்தில்) இருக்கும் ஒரு நிறைந்த செல்வமே, பக்தர்களுக்கு உரிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 508 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தத்தன, பெருமாளே, குட்டிய, பத்தினி