பாடல் 507 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன ...... தனதான |
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர் நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள் ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர் சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர் சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே. |
கரிய கூந்தலை உடையவர்கள், முத்துப்போன்ற பல் வரிசை உள்ள வாயில் சர்க்கரையைப் போன்று இனிய பேச்சை உடையவர்கள், பூரண சந்திரன் போன்ற திலகத்தை அணிந்துள்ள நெற்றியை உடைய விலைமாதர்கள், கரிய கயல் மீன் போலவும், வாள் போலவும், வேலுக்கு ஒப்பானதுமான கண்களை உடையவர்கள், நல்ல திறமை உள்ள சித்திரம் எழுதுவோன் கற்பனை செய்தும் எழுத முடியாத அழகிய உருவம் நிறைந்தவர்கள், தோள்கள் கரும்பு ஆலையில் உள்ள கரும்பு போல் மென்மையாக உடையவர்கள், தேமல் படர்ந்த, முத்து மாலை அணிந்த மலை போன்ற மார்பகங்களை உடையவர்கள் .. இத்தகைய விலைமாதர்கள் இட்ட வேலைகளைச் செய்து கொண்டே தனியேனாகிய நான் தினந்தோறும் திரிந்து அலைவேனோ? ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அளித்தருளுக. பூ மாலை அணிந்துள்ள கூந்தலை உடையவள், அற்புதமான வேதச் சொரூபத்தை உடையவள், தனது அக்கினி உருவத்தில் ஒளி பொருந்திய மலை போன்ற பார மார்பகங்களைக் கொண்டவள், குயில் போன்றவள், சிவபெருமானிடத்தில் காதல் நிறைந்த நல்ல செயலினாளுமான உத்தமி, மாணிக்கம் போன்ற மின்னொளி வீசுபவள், மாசற்றவள் ஆகிய உமாதேவியை பாகத்தில் கொண்டவர், சூலத்தைக் கையில் கொண்டவர், அனல் மேனிப் பரமனார் ஆகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற ஜோதிப் பொருளான பிரணவத்தை அவர் செவியில் ஏற்றிய முருகனே, பிரகாசமான ஜோதி வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான் போன்ற வள்ளியை அணைந்து, ஜோதிமயமான புலியூராகிய சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 507 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத்தன, உடையவர்கள், உள்ள, கொண்டவர், கரும்பு, மாலை, ஆகிய, நல்ல, உடையவள், விலைமாதர்கள், பெருமாளே, கரிய, கூந்தலை, அணிந்துள்ள, போலவும்