பாடல் 504 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்த தத்தன தான தானன தத்த தத்தன தான தானன தத்த தத்தன தான தானன ...... தனதான |
துத்தி பொற்றன மேரு வாமென வொத்தி பத்திரள் வாகு வாயவிர் துப்பு முத்தொடு மார்பி னாடிட ...... மயில்போலே சுக்கை மைக்குழ லாட நூலிடை பட்டு விட்டவிர் காம னாரல்குல் சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர் தத்தை பட்குர லோசை நூபுர மொத்த நட்டமொ டாடி மார்முலை சற்ற சைத்துகு லாவும் வேசிய ...... ரவரோடே தர்க்க மிட்டுற வாடி யீளைநொய் கக்கல் விக்கல்கொ ளூளை நாயென சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச் சித்ர வித்தைய ராட வானவர் பொற்பு விட்டிடு சேசெ சேயென செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா செத்தி டச்சம னார்க டாபட அற்று தைத்தசு வாமி யாரிட சித்தி ரச்சிவ காமி யாரருள் ...... முருகோனே தெற்க ரக்கர்கள் தீவு நீறிட விட்ட அச்சுத ¡£ன மானொடு சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே. |
தேமல் படர்ந்த அழகிய மார்பகங்கள் மேரு மலைக்கு ஒத்ததாகி, யானைக் கூட்டங்களின் வெற்றி கொண்டதாகி விளங்கும் பவள (மாலை) முத்து (மாலை) இவைகளோடு மார்பிலே ஆட, மயிலைப் போல் விளங்கி, பூ மாலை அணிந்த கரிய கூந்தல் அசைய, நூலைப் போன்ற நுண்ணிய இடையில் பட்டாடை அணிந்து ஒளி விட, காமனுக்கு இடமாகிய பெண்குறியைச் சுற்றி அமைய உடுத்து, விளங்கும் வாழை போன்ற தொடைகளை உடைய பொது மகளிர், கிளியாகிய பறவையின் குரலோசைக்குப் பொருந்த சிலம்புகள் ஒத்து ஒலிக்க நடனம் ஆடி, மார்பகங்களை கொஞ்சம் அசைத்து குலவிப் பேசும் பொது மகளிருடன், தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி இவ்வாறான ஒலிகள் எல்லா திசைகளிலும் முக்கித் திணற, வலியுள்ள பேரிகை, தவில் ஆகியவை ஒலி எழுப்ப, அழகிய வித்தைகள் வல்லோர் (மனம் மகிழ்ச்சி கொண்டு) ஆட, தேவர்கள் அழகிய பொன்னாலாகிய மலர்களைச் சொரிந்து ஜய ஜய ஜய என்று கோஷமிட, செக்கில் போட்டு அசுரர்கள் பொடியாகும்படி செலுத்திய வேலாயுதனே, அந்த யமன் இறக்கவும், (அவனுடைய) எருமைக் கடா வீழ்ந்து அழியவும், அன்று காலால் உதைத்த சுவாமியாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் அழகிய சிவகாமி அம்மையார் ஈன்ற குழந்தையே, தெற்கே உள்ள ராவணன் முதலிய அரக்கர்கள் இருந்த இலங்கைத் தீவு பொடியாகிப் பாழ்படச் செய்த திருமால் பெற்ற மகளாகிய மான் போன்ற வள்ளியோடு அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 504 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, அழகிய, தானன, தத்தன, மாலை, தீவு, பெருமாளே, போல், சீச்சீ, பொது, சித்தி, விளங்கும், தீதிமி, வாழை, பட்டு, மேரு, தித்தி, மித்திமி, னத்தன, தோதக, பேரிகை