பாடல் 502 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - கெளளை;
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனன தனதான தனதனன தனதான தனதனன தனதான ...... தனதான |
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொருபகிரி யிடமேவு ...... முகமாறும் சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட அயில்கரமொ டெழில்தோகை ...... மயிலேறி அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை அதிசயமெ னருள்பாட ...... வரவேணும் விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன் மினலனைய இடைமாது இடமருவு குருநாதன் மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே. |
கதிர் போன்ற திருமேனியின் வடிவழகும், முற்றின ஞான ஸ்வரூபமும், கி¡£டம் சூடிய முகங்கள் ஆறும், தேவர்கள் சூட்டிய மாலைகளில் இருக்கும் வண்டுகள் முரல, அம்மாலைகளிலிருந்து மெதுவான வேகத்தில் துளித்துளியாக தேன் சொட்ட, பவள வாய் இதழிலிருந்து சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச, அடர்ந்த பவளம் போன்ற ஒளி பாய, அருமையான சிலம்பு ஒலிக்க, வேல் ஏந்திய திருக்கரத்துடன் அழகிய கலாப மயில்மீது ஏறி, அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு அழிய, தேவர்கள் யாவரும் ஒன்றுக்கும் உதவாத எனக்கு நீஅருள் செய்வது எவ்வளவு ஆச்சரியம் என்று உன்னருளைப் போற்றிப் பாடும்படியாக, நீ எழுந்தருளி வரவேண்டும். நந்தி தேவனைப் போற்றி வணங்கி, (அவர் அனுமதியுடன்) பிரமன், திருமால், மற்ற தேவர்கள், முநிவர் கூட்டங்களுடன் ஓடிவந்து சரணடைய, தமது கண்டத்திலேயே தங்கி நிற்கும்படியாக விஷத்தை வாரி உண்டு சரணடைந்தவர்களுக்கு அருள் செய்த தலைவனும், மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதி தேவியை தமது இடப்பாகத்தில் பொருந்தி வைத்துள்ள தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபிரான் மிகவும் மகிழ்ச்சி அடைய அவருக்கு ஞானோபதேசப் பிரசாதம் தந்தவனே, துன்பங்களும், கிரகக் கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக. குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே, இன்ப நிலையில் உள்ள முதிய முநி* வியாக்ரபாதருடன், பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே.
* சிதம்பரத்தில் முதலில் தவத்தில் இருந்த வியாக்ரபாதரை 'முதிய முநி' எனக் குறிப்பிட்டார் - தில்லைப் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 502 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தனதனன, தேவர்கள், முதிய, உள்ள, தமது, பெருமாளே