பாடல் 501 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன தாந்தன தானதன ...... தனதான |
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை மோந்துப யோதரம ...... தணையாகச் சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக காந்தமொ டூசியென ...... மடவார்பால் கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன் கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை பூண்டுற வாடுதின ...... முளதோதான் பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள் நீண்டிடு மாலொடய ...... னறியாது பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன் ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர் பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே. |
சாந்தும், புனுகும் (மார்பில்) தோய்ந்தும், அழகு நிறைந்த கூந்தலை முகர்ந்து பார்த்தும், மார்பகத்தையே தலையணையாகக் கொண்டு அதன் மேல் சாய்ந்தும், ஆடம்பரத்துடன் வாழ்ந்தும், காம இச்சை இன்பத்தில், காந்தமும் ஊசியும் போல இழுக்கப்பட்டு, விலைமாதர்களிடத்தில் மிக்கெழுந்த அன்பு மனத்தைத் தொலைத்து, உன்னுடைய திருவடியை அணுகி, ஆய்ந்தறிந்து உணர்கின்றோம் என்ற உணர்ச்சி இல்லாத மெளன நிலையில் அடி நாயேனாகிய நான், குவிந்து அவிழ்ந்த தாமரை போன்ற அழகிய பதங்களாகிய, குற்றம் இல்லாத இரண்டு திருவடிகளையும் மனதில் கொண்டு அன்பு பூணும் நாள் ஒன்று உள்ளதோ? பாம்பாகிய ஆதிசேஷன் மேல் இன்பமாக விளங்கி கண் துயில் கொள்ளும் நீண்ட வடிவம் கொண்ட திருமாலும், பிரமனும் (அடி முடியை) காண முடியாது நின்று, பாம்பு வடிவத்தைக் கொண்ட (பதஞ்சலி) முனிவரும், தாவிச் செல்லும் புலியின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத முனிவரும் பொருந்தி நின்று, எதிரே தரிசிக்கும்படி நடனம் செய்கின்ற கூத்தப் பெருமானுடைய அழகிய பூங்கொத்துக்களையும், பிறைச் சந்திரனையும் சூடியுள்ள ஜடாமகுடமாகிய பொன் வண்ணப் புரிசடையில் விரும்பி விளையாடும் குழந்தையே, அழகிய கமுகு மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளதும், நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்ததுமான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ்கின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 501 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாந்தன, அழகிய, தானதன, கொண்ட, முனிவரும், நின்று, அன்பு, பெருமாளே, கொண்டு, மேல், இல்லாத