பாடல் 500 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் ...... தனதான |
சகுடமுந்துங் கடலடைந்துங் குளமகிழ்ந்துந் தோய்சங்கங் கமுகடைந்தண் டமுதகண்டந் தரளகந்தந் தேர்கஞ்சஞ் சரமெனுங்கண் குமிழதுண்டம் புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர் சலசகெந்தம் புழுகுடன்சண் பகமணங்கொண் டேய்ரண்டந் தனகனம்பொன் கிரிவணங்கும் பொறிபடுஞ்செம் பேர்வந்தண் சலனசம்பொன் றிடைபணங்கின் கடிதடங்கொண் டாரம்பொன் ...... தொடர்பார்வை புகலல்கண்டஞ் சரிகரம்பொன் சரணபந்தந் தோதிந்தம் புரமுடன்கிண் கிணிசிலம்பும் பொலியலம்புந் தாள்ரங்கம் புணர்வணைந்தண் டுவரொடுந்தொண் டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ...... கடைநாயேன் புகழடைந்துன் கழல்பணிந்தொண் பொடியணிந்தங் காநந்தம் புனல்படிந்துண் டவசமிஞ்சுந் தவசர்சந்தம் போலுந்திண் புவனிகண்டின் றடிவணங்குஞ் செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய் திகுடதிந்திந் தகுடதந்தந் திகுடதிந்திந் தோதிந்தம் டகுடடண்டண் டிகுடடிண்டிண் டகுடடண்டண் டோடிண்டிண் டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி செககணஞ்சஞ் சலிகைபஞ்சம் பறைமுழங்கும் போரண்டஞ் சிலையிடிந்துங் கடல்வடிந்தும் பொடிபறந்துண் டோர்சங்கஞ் சிரமுடைந்தண் டவுணரங்கம் பிணமலைந்தன் றாடுஞ்செங் ...... கதிர்வேலா அகிலஅண்டஞ் சுழலஎங்கும் பவுரிகொண்டங் காடுங்கொன் புகழ்விளங்குங் கவுரிபங்கன் குருவெனுஞ்சிங் காரங்கொண் டறுமுகம்பொன் சதிதுலங்குந் திருபதங்கந் தாஎன்றென் ...... றமரோர்பால் அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண் சரணமுங்கொண் டோதந்தம் புனைகுறம்பெண் சிறுமியங்கம் புணர்செயங்கொண் டேயம்பொன் அமைவிளங்கும் புலிசரம்பொன் திருநடங்கொண் டார்கந்தம் ...... பெருமாளே. |
நீர்ப்பாசிகள் தோன்றிப் பின்னர் மேற்பட்டுக் கிடக்கும் கடல் போன்ற வாழ்க்கையைக் கண்டு அங்கு உள்ளம் மகிழ்ந்தும், சங்கம் போலவும் கமுகு போலவும் பொருந்தி நெருங்கி, அமுதம் பொதித்த கழுத்து, முத்து மாலை அணிந்துள்ள கழுத்தின் அடிப்பாகம், மலர்ந்த தாமரை, அம்பு இவைகளுக்கு ஒப்பான கண்கள், குமிழம் பூப் போன்ற மூக்கு, புருவம் என்கின்ற செவ்விய வில் ஆகிய பொலிவு விளங்கும் விலைமாதர்கள் அழகு கொண்டவர்களாய் விளங்க, தாமரை மொட்டுப் போன்றதும், நறு மணமுள்ள புனுகு சட்டத்துடன் சண்பகம் இவற்றின் நறு மணம் கொண்டு பொருந்தி, பொன் மலையாகிய மேருவையும் கீழ்ப்படியச் செய்ய வல்லதும் தேமல் பரந்ததுமான இரண்டு கனத்த மார்பகங்கள், பல பேர்வழிகள் வந்து நெருங்கும் அசைவு கொண்டுள்ள மின்னலுக்கு ஒப்பான இடை, பாம்பின் படம் போன்ற பெண்குறி கொண்டவர்கள். அழகிய பொற்காசு (சம்பாதிப்பதிலேயே) நாட்டம் செலுத்தும் பார்வை. சொல்லுவது போல் வெளிப்படுத்த அழகிய கையில் உள்ள பொன் வளையலும், காலில் கட்டப்பட்டுள்ள தோதிந்தம் என ஒலிப்பதுமான பாதசரத்துடன் கிண்கிணியும் சிலம்பும் விளங்கி ஒலிக்கின்ற அடியுடன் நடன மேடையில் சேர்ந்து பொருந்தி நெருங்குபவராகிய பொது மகளிர்க்கு அடிமைத்தொண்டு செய்யும் வேதனையில் பட்டுக் கிடந்து, (அந்த அழகில்) ஈடுபட்டுக் கொஞ்சுகின்ற கீழ்ப்பட்ட நாய் போன்ற நான், புகழ் பெற்று, உனது திருவடியைப் பணிந்து, ஒள்ளிய திரு நீற்றை அணிந்து, அந்தச் சமயத்தில் ஆனந்தக் கண்ணீரில் படிந்து, பரவசம் மேம்படும் தவசிகளுடைய சுகம் போன்று, வலிய இப்பூமியின் நிலையாமையை அறிந்து, இப்பொழுதே உனது திருவடியை வணங்கும் பணியை மேற் கொள்ள அழகிய செவ்விய சீரான செம் பொன்னாலாகிய கழல்கள் அணிந்த திருவடியைத் தந்து அருளுக. திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்று ஒலிக்கும் சங்கமும் பல பேரிகைகளும், செககணம்சம் என்று ஒலித் திரளை எழுப்பும் சல்லிகை என்ற பெரும் பறையும், ஐந்து* வகையான இசைக் கருவிகளும் பறைகளும் முழங்குகின்ற போர்க் களத்தில், பூமியும் மலைகளும் பொடிபடவும், கடல் வற்றவும், தூள் பறக்கவும், அங்கு இருந்த (அசுரர்கள்) கூட்டத்தின் தலைகள் உடையவும், நெருங்கி வந்த அசுரர்களின உடல் பிணமாகும்படி எதிர்த்துப் பொருதும், அன்று போர் புரிந்த செவ்விய ஒளி வேலை ஏந்தியவனே, எல்லா உலகங்களும் சுழலும்படி எங்கும் வலம்கொண்டு அங்கு நடனம் செய்கின்ற தலைவனே, புகழ் விளங்குகின்ற உமா தேவியைப் பக்கத்தில் கொண்ட சிவபெருமானுக்கு குரு மூர்த்தி என்கின்ற அழகிய பெருமையைப் படைத்து, ஆறு முகங்களையும், தாள ஒத்துக்களை விளக்கும் அழகிய திருவடிகளையும் உடைய கந்தனே என்று தேவர்கள் உன் மீது மலர்களைச் சொரிந்து அழகிய திருக் கைகளைக் கூப்பித் தொழுது ஒள்ளிய திருவடிகளை மனத்தில் கொண்டு புகழ்ந்து நிற்க, அழகினைக் கொண்ட குறச் சிறுமியாகிய வள்ளியின் அங்கங்களை அணைந்து, வெற்றியைக் கொண்ட அழகிய பொன்னம்பலம் விளங்கும் புலீச்சுரம் என்னும் சிதம்பரத்தில் அழகிய திரு நடம் புரியும் சிவபெருமானுக்கு உரியவனும், நிறைந்து பொலிபவனுமான அழகிய கந்தப் பெருமாளே.
* ஐந்து வகையான பறைகள்:தோல்கருவி, தொளைக்கருவி, நரப்புக் கருவி, மிடற்றுக் கருவி, கஞ்சக் கருவி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 500 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதந்தம், அழகிய, தோதிந்தம், அங்கு, தானந்தம், செவ்விய, கொண்ட, கருவி, பொருந்தி, திகுட, ஒள்ளிய, திந்திந், திரு, டிண்டிண், வகையான, சிவபெருமானுக்கு, டிமுட, உனது, டண்டண், டகுட, விளங்கும், பெருமாளே, கடல், டோடிண்டிண், டகுடடண்டண், திகுடதிந்திந், போலவும், நெருங்கி, கொண்டு, பொன், என்கின்ற, ஒப்பான, தாமரை, புகழ்