பாடல் 498 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானத் தானத் தாந்தன தானன தானத் தானத் தாந்தன தானன தானத் தானத் தாந்தன தானன ...... தனதான |
கோதிக் கோதிக் கூந்தலி லேமலர் பாவித் தாகச் சாந்தணி வார்முலை கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ...... குயில்போலக் கூவிக் கூவிக் காண்டிசை போலவெ நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர் கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் ...... வருமோவென் றோதித் தோளிற் பூந்துகி லால்முலை மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு வோடித் தேடிச் சோம்பிடு வார்சில ...... விலைமாதர் ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி சூளைக் காரச் சாங்கமி லார்சில வோரைச் சாகத் தீம்பிடு வார்செய ...... லுறவாமோ வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் ...... விடும்வேலா வேளைச் சீறித் தூங்கலொ டேவய மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை ...... தருசேயே நாதத் தோசைக் காண்டுணை யேசுடர் மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர் நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் ...... சுரமானை ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் ...... பெருமாளே. |
ஆய்ந்து ஆய்ந்து கூந்தலில் மலர்களைப் பரப்பிச் சூட்டி, உடலில் சந்தனம் அணிந்துள்ள மார்பு என்னும் மலை போன்ற சேனையுடன், பவளம் போன்ற வாயால் தேன் போன்ற மொழியால் குயில் போலக் கூவி அழைத்து, (ஆடவர்களைக்) கண்டு இசையுடன், பேசும் பேச்சுக்குத் தக்கபடி வெட்கப்பட்டும், (ஒரு சமயம்) குனிந்தும், (மற்றொரு சமயம்) பாய்ந்தும் சில பொது மகளிர் நடிப்பர். ஒன்று கூடியும், தெளிவுற்றும் சூழ்ந்து யோசிப்பவர்களாய், பொருள் கிடைக்குமோ என்று பேசி, தோள் மீதுள்ள அழகிய புடவையால் மார்பை மூடி, வஞ்சனை எண்ணத்துடன் தூக்கம் இல்லாத கண்களுடன் தெருவில் ஓடியும் (வாடிக்கையாளரைத்) தேடியும், சில வேசிகள் சோம்பலாய்க் காலம் கழிப்பர். ஒருமிக்க தரித்திர நிலையைச் சேர்ந்தவர்களாய், வேசிகளாய், நல் ஒழுக்கம் இல்லாதவர்களாய், (தம்மிடம் வரும்) சிலரைச் சாகும் அளவுக்கு கேடு செய்பவர்களாகிய விலைமாதர்களின் தொழில்களில் உறவு கொள்ளுதல் நல்லதா? வேதம் வல்ல பிரமனை காந்தள் மலர் போன்ற கையால் தலையில் குட்டி விளையாடி, ஆதிசேஷனாகிய பாம்பின் நூற்றுக் கணக்கான முடிகள் வேதனைப்பட்டு அசையக் கோபித்து, அசுரர்களின் மேல் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, மன்மதனைக் கோபித்து, யானையுடன் புலியின் தோலைப் போர்வையாகவும், உடையாகவும் ஒரு சேர அணிந்தவராகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உறையும் அழகிய சாம்பவியாகிய மாதா, உமை பெற்ற குழந்தையே, உனது திருச்சிலம்போசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் தேவனே, மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி, பிராணவாயு சுழுமுனை* நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிவாயாக. தேவ லோகத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையையும், ஞானப் பால் போலவும் முப்பழங்களின் தேன் போலவும் இனிய சொரூபத்தை உடையவளும் ஆகிய வள்ளி நாயகியை தினைப் புனக் காட்டிலும் சேர்ந்து தழுவியவனே, சிவஞானப் பூமியாகிய அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) மகிழ்ந்து விளங்கும் பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 498 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத், பத்து, இடைகலை, அழகிய, பிங்கலை, ஞானப், ஒன்று, தாந்தன, தானன, காற்றுக்கு, பெயர், விடும், முனை, யும், சுழு, சுவாசம், என்றும், நாடிகளுள், மேல், ஆய்ந்து, உடலில், பெருமாளே, கூவிக், கோதிக், தேன், சமயம், நாடி, பிராணவாயு, கோபித்து, தலையில், போலவும்