பாடல் 497 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -
மத்யமாவதி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தான தனத்தம் தான தனத்தம் தான தனத்தம் ...... தனதான |
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந் ...... தடுமாறிக் காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங் காசினி முற்றுந் ...... திரியாதே சீவ னொடுக்கம் பூத வொடுக்கம் தேற வுதிக்கும் ...... பரஞான தீப விளக்கங் காண எனக்குன் சீதள பத்மந் ...... தருவாயே பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட வுக்ரந் ...... தருவீரா பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ் சோலை சிறக்கும் ...... புலியூரா சூரர் மிகக்கொண் டாட நடிக்குந் தோகை நடத்தும் ...... பெருமாளே. |
காவித் துணியை உடுத்திக் கொண்டும், தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து வைத்தும், காடுகளில் புகுந்து தடுமாறியும், காய், பழவகைகளைப் புசித்தும், தேகத்தை விரதங்களால் வருத்தியும், உலகம் முழுவதும் திரிந்து அலையாமல், சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும் ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும் நன்றாக உண்டாகும்படி, மேலான ஞான ஒளி விளக்கத்தினையான் காணும்படி, எனக்கு உன் குளிர்ந்த தாமரை அடிகளைத் தந்தருள்க. பாவமே உருவெடுத்த தாருகாசுரன் கூட்டத்தினர் பாழ்பட்டொழிய கோபம் காட்டிய வீரனே, போர்க்களத்தில் கைகளைக் கொட்டும் பேய்கள் உளறும் பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே, அன்னங்கள் நிற்கும் வயல்கள் சூழ்ந்த சோலைகள் விளங்கும் புலியூரனே (சிதம்பரேசனே), சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக நடனமாடும் மயிலினை நடத்தும் பெருமாளே.
* சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன் சிவன் என்று ஆகிவிடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 497 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தம், சீவன், மாத்திரை, ஒடுக்குதலும், நடத்தும், கொட்டும், பேய்கள், பெருமாளே