பாடல் 494 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - வலஜி ;
தாளம் - அங்கதாளம் - 14
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தக-1, திமிதக-2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தக-1, திமிதக-2
தனதன தனன தனதன தனன தனதன தனனாத் ...... தனதான |
தறுகணன் மறலி முறுகிய கயிறு தலைகொடு விசிறீக் ...... கொடுபோகுஞ் சளமது தவிர அளவிடு சுருதி தலைகொடு பலசாத் ...... திரமோதி அறுவகை சமய முறைமுறை சருவி யலைபடு தலைமூச் ...... சினையாகும் அருவரு வொழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற் ...... கருள்வாயே நறுமல ரிறைவி யரிதிரு மருக நகமுத வியபார்ப் ...... பதிவாழ்வே நதிமதி யிதழி பணியணி கடவுள் நடமிடு புலியூர்க் ...... குமரேசா கறுவிய நிருதர் எறிதிரை பரவு கடலிடை பொடியாப் ...... பொருதோனே கழலிணை பணியு மவருடன் முனிவு கனவிலு மறியாப் ...... பெருமாளே. |
இரக்கமற்ற யமன் திண்ணிய பாசக்கயிற்றை அதன் நுனியைப் பிடித்து வீசி எறிந்து உயிரைக் கொண்டுபோகும் துன்பம் எனக்கு நேராமல் தவிர்க்க, நன்றாகத் தொகுக்கப்பட்ட வேதம் முதலிய பல சாஸ்திரங்களையும் ஓதி, ஆறு சமயங்களும்* ஒன்றோடொன்று மாறுபட்டு மோதித் தலை வேதனைதரப் போராடும் வெறுப்பேற்றும் செயல்கள் ஒழிந்து, பேரின்ப வடிவம் உள்ள சற்குணப் பொருளை அமைதியோடு அறியும்படி எந்தனுக்கு நீ அருள்செய்ய வேண்டும். மணமுள்ள தாமரையில் அமர்ந்த லக்ஷ்மிக்கும் திருமாலுக்கும் மருமகனே, (இமய) மலை பெற்ற பார்வதியின் செல்வக் குமரா, கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு இவற்றை அணிந்த இறைவன் நடனமாடும் புலியூரின் (சிதம்பரத்தின்) குமரேசனே, கோபத்தோடு வந்த அசுரர்களை, வீசுகின்ற அலைகள் நிறைந்த கடலிடத்தில் தூளாக்கிப் போர் செய்தவனே, திருவடிகளின் வீரக் கழல்களை வணங்குவோரிடம் கோபம் காட்டுவதைக் கனவிலும் அறியாத கருணாமூர்த்திப் பெருமாளே.
* ஆறு வகைச் சமயம்: காணாபத்யம், செளரம், கெளமாரம், சைவம், வைணவம், சாக்தம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 494 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகதிமி, தனதன, பெருமாளே, பொருளை, தலைகொடு, தகிட