பாடல் 493 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - அடாணா;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான |
எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி ...... அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக ...... முடியாது கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு ...... மயர்வானார் கடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் ...... தருவாயே விழுதிக ழழகி மரகத வடிவி விமலிமு னருளு ...... முருகோனே விரிதல மெரிய குலகிரி நெரிய விசைபெறு மயிலில் ...... வருவோனே எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை யிரைகொளும் அயிலை ...... யுடையோனே இமையவர் முநிவர் பரவிய புலியு ரினில்நட மருவு ...... பெருமாளே. |
ஏழு கடல்களின் கரையிலுள்ள மணலையெல்லாம் எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம் என் துன்பம் நிறை பிறவிகள் என்ற அவதாரங்கள். இனி உனக்கே அடைக்கலமாம் என் உயிரும், உடலும். இனியும் பிறப்பெடுத்து உடலைவிட என்னால் முடியாது. கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், யமனும், பிரம்மாவும், என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள். என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம் புகுவதே ஆகும். யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை பூணுதற்கே ஆகும். நீ விரைவில் உன் திருவடிகளைத் தர வேண்டும். சிறந்து திகழும் அழகியும், பச்சை வடிவானவளும், பரிசுத்தமானவளுமான பார்வதி முன்பே ஈன்றருளிய முருகப் பெருமானே, விரிந்த பூமியானது பற்றி எரிய, கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட, வேகமாக வரவல்ல மயிலில் வருபவனே, ஏழு கடல்களும் கொந்தளிக்க அசுரர்களின் உயிரை உணவாகக் கொள்ளும் வேலினை ஆயுதமாகக் கொண்டவனே, தேவர்களும், முனிவர்களும்* வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் நடனம் செய்கின்ற பெருமாளே.
* வணங்கிய முனிவர்கள் வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வசிஷ்டர் ஆகியோர் ஆவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 493 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, உன்னிடம், ஆகும், பெருமாளே, மயிலில், எழுகடல், முடியாது