பாடல் 492 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனனா தத்தன தானத்தம் தனனா தத்தன தானத்தம் தனனா தத்தன தானத்தம் ...... தனதான |
நகையா லெத்திகள் வாயிற்றம் பலமோ டெத்திகள் நாணற்றின் நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர் நடையா லெத்திக ளாரக்கொங் கையினா லெத்திகள் மோகத்தின் நவிலா லெத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச் சிகையா லெத்திக ளாசைச்சங் கடியா லெத்திகள் பாடிப்பண் திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண் டுழல்வா ருக்குழல் நாயெற்குன் செயலா லற்புத ஞானத்திண் ...... கழல்தாராய் பகையா ருட்கிட வேலைக்கொண் டுவரா ழிக்கிரி நாகத்தின் படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா பணநா கத்திடை சேர்முத்தின் சிவகா மிககொரு பாகத்தன் பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே சுகஞா னக்கடல் மூழ்கத்தந் தடியே னுக்கருள் பாலிக்குஞ் சுடர்பா தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா சுகரே சத்தன பாரச்செங் குறமா தைக்கள வால்நித்தஞ் சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே. |
சிரிப்பால் ஏமாற்றுபவர்கள். வாயில் வெற்றிலை பாக்கு உண்ட தாம்பூல எச்சிலுடன் ஏமாற்றுபவர்கள். வெட்கம் இல்லாமல் இனிமையான கண்களால் ஏமாற்றுபவர்கள். துர்க் கந்தம் கொண்ட தொடைகளை உடைய விலைமாதர்கள் தங்களுடைய நடையைக் கொண்டு ஏமாற்றுபவர்கள். நிறைந்துள்ள மார்பகங்களால் ஏமாற்றுபவர்கள். காம மயக்கம் தரக் கூடிய பேச்சால் ஏமாற்றுபவர்கள். மயிலின் தோகையைப் போல உள்ள இளம் கூந்தலாகிய மேகம் போன்ற மயிர் முடியால் ஏமாற்றுபவர்கள். ஆசையை ஊட்டும் சுகத்தைத் தரும் வாசனைகளால் ஏமாற்றுபவர்கள். பாடல்களைப் பாடித் தமது இசை ஞானத்தால் ஏமாற்றுபவர்கள். பெரிய நெருக்கமான தெருக்களில் சிலர் கூடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் திரிகின்றவர்களாகிய விலைமாதர்கள் வசமே திரியும் அடியேனுக்கு, உனது திருவிளையாடலால் அற்புதமயமான வலிய திருவடிகளைத் தந்து காப்பாயாக. பகைத்து நின்ற அசுரர்கள் அஞ்ச வேலாயுதத்தைக் கொண்டு, உப்புத் தன்மை நிறைந்த கடல்களும், (ஏழு) மலைகளும், ஆதி சேஷனுடைய படங்களும் குலைந்து விழ, அசுரன் சூரனை அழித்த சூரனே, பாம்பின் படம் போன்ற பதக்கம் விளங்கும் மேகலை அணிந்த அரையை உடைய முத்துப் போன்ற சிவகாமி அம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவராகிய சிவபெருமானுக்கு அன்புடன் மெய்ப் பொருளை உபதேசம் செய்த சற்குருவே, சுக ஞானக் கடலில் முழுகி இன்பம் பெறத் தந்து அடியேனுக்குத் திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகனே, முத்தாலாகிய வீரக் கழல்களை அணிந்த வீரனே, இன்பச் சுவை கொண்ட மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் களவியல் வழியில் தினந்தோறும் சுகம் அனுபவித்து, புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 492 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஏமாற்றுபவர்கள், லெத்திகள், உடைய, தானத்தம், தத்தன, தனனா, கொண்டும், தந்து, அணிந்த, கொண்டு, கொண்ட, லெத்திக, பெருமாளே, விலைமாதர்கள்