பாடல் 480 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தானன ...... தனதான |
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர் சுக்கத் தாழ்கட லேசுக மாமென புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள் தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே துக்கத் தேபர வாமல்ச தாசிவ முத்திக் கேசுக மாகப ராபர சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந் தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா திக்கத் தோகண தாவென வேபொரு சொச்சத் தாதையர் தாமென வேதிரு செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச் செப்பொற் பீலியு லாமயில் மாமிசை பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே. |
கண்ணில் பீளை, மேலெழும் கோழை, மூளையில் தோன்றி வீங்குகின்ற புரைப் புண், அச்சம் தருகின்ற துர் நீர்கள், மயிர், தோல், வளைவான நாக்குப் பூச்சி, புழு இவற்றுடன் அடைந்து நிறைந்த ஊன் இவை பொருந்தப் பெற்ற இவ்வுடலில், எலும்பின் பக்கத்தில் பல நாடிக் குழாய்கள், அசிங்கமான காதுக் குறும்பி இவை சேர்ந்து பலமாக விளைகின்ற பத்தைகளான கசுமாலங்களைக் கொண்ட அடையாளங்கள் வாய்ந்த தோலோடு அமைந்த குடிசையாகிய இவ்வுடலில், ஐம்புலன்களாகிய தந்திரக்காரர்கள் களவுடன் ஒதுங்கியுள்ளதும், ஆழ்ந்த கடல் போன்றதும் ஆகிய வாழ்க்கையே சுகம் என நினைத்து அதில் ஈடுபட்டு, பொன்னாசை, பெண்ணாசை, மண் ஆசைகள் ஒன்று சேர்ந்து, தீ வினை ஊழ் வினை இவைகளின் காலக் கொடுமை காரணமாக, துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை ஏறும்படி உன் திருவடியைத் தந்து அருளுக. தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என்ற பல விதமான தாளங்களின் ஒலியை எழுப்பி, அசுரர்களின் கூட்டத்துடன் தேர்களும் குதிரைகளும் அழிபட்டு கீழ் நிலை அடைந்து கடலில் முழுகும்படி சக்தி வேலுக்கே உணவு ஆயின என்னும்படியாகச் செலுத்திய ஒளி வீசும் வேலனே, திக்கத் தோகண தாவென்று நடனம் செய்கின்ற நிர்மல மூர்த்தியான தந்தையாகிய நடராஜப் பெருமானே நீ என்று சொல்லும்படி, அழகிய சிவந்த திருவடிகளே பதித்து, இசை ஒலிகள் பாட, செம் பொன் நிறத் தோகை விளங்கும் மயில் மீது, பக்கத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியோடு சிறப்புற்று சிதம்பரத்தின் தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 480 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தத்தத், தோகண, வாசலில், கோபுர, தெற்குக், பெருமாளே, அடைந்து, வினை, சேர்ந்து, பக்கத்தில், இவ்வுடலில், திக்கத், டீகுட, தோகிட, தக்கத், தோல்குடி, தாகிட, தீகிட, தாகண, சேகண, செக்கச், டாடுடு