பாடல் 478 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தய்யதன தானனத் தானனந் தானதன தய்யதன தானனத் தானனந் தானதன தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான |
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ ...... லலைபோதம் மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல் கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை ...... மலையானை வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல் வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி ...... புரவோசை மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல் தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய ...... லுறவாமோ அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ...... முருகோனே அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல் என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல் அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி ...... மணவாளா செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக ...... வடிவேலா தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல் தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு ...... பெருமாளே. |
(முதல் 12 வரிகள் வேசையரின் அங்க நலத்தை வருணிப்பன). முல்லை மலர் போலவும், முத்துக்கள் உதிர்ந்தனவைகளால் அமைந்தன போலவும் உள்ள பற்களையும், வள்ளிக் கொடியைப் போல உள்ள நல்ல காதுகளில் விளங்கி அசைகின்ற குண்டலங்களையும், முல்லை மலர் மாலை சுற்றி உள்ளதும், அசைகின்ற பூங்கொத்துக்கள் நிறைந்துள்ளதும், அலை வீசுவது போலப் புரளும் அந்தக் கூந்தலையும், அழகாய் எடுக்கப்பட்ட வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றியையும், அம்பையும் கயல் மீனையும் போன்ற கண்களையும், கிளியின் குரல் போன்ற குரலையும் உடையவர்கள். இதழ்களையுடைய தாமரைப் பூ என்னும்படியான மலர் முகத்தையும், கமுக மரம் போன்றதும், நினைப்பதற்கு இடமானதும், தேமல் பரந்துள்ளதும், எதிர்த்து வரும் யானை போன்றதும், வன்மை வாய்ந்ததுமான குன்றைப் போன்றதுமான மார்பகங்களும், ஆலிலையைப் போன்றதும் பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிற்றையும், அந்த வயிற்றின் மேல் உள்ள ஆடையில் அமைந்துள்ள நூல் போல் நுண்ணிய இடையையும், காமத்துக்கு நிதி இடமாகிய பெண்குறியையும், வாழை போன்ற தொடைகளையும் உடையவர்கள். பூப் போன்ற காலில் அணியப்பட்டு அசைகின்ற சிலம்பின் ஒலி மல்லிட்டுக் கொண்டு வாதாடுவது போல் மாறுபட்டு பட்டாடை தன்மேல் படும்போதெல்லாம் அசைந்து ஒலிக்கவும், காம மயக்கத்தால் தள்ளுகின்ற நடையோடு, சிற்சில வார்த்தைகளே குழறிப் பேசி, ஆசை பூண்டு, சாமர்த்தியம் உள்ளவர்கள் போல பொற் காசுகளைத் தம்மிடம் வருவோரிடம் கொள்ளை கொள்ளும் விலைமாதர்கள் மேல் காம வெறி கொள்ளுவது நன்றோ? துன்பத்தைத் தரும் வினை தொலையவும், அசத்தான குற்றங்கள் நீங்கிடவும், இன்பமான உள்ளம் பொருந்தி அமையவும் அருள் வைத்து நம்மை ஆளுகின்ற தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி உற காதில் குளிர்ந்து பொருந்த, ஞானத்துக்கு விதை போன்ற மூலப்பொருளை, உபதேசம் செய்த கந்தனே, குமரனே, முருகனே, அன்னம் போன்ற நடையை உடைய குறப் பெண், பந்தாடுகின்ற விரல்களை உடைய என்னுடைய தாய், வெள்ளை முத்துக்கள் போன்ற கடப்ப மாலை விளங்கும் கூந்தலை உடைய அம்மை, வன்மை வாய்ந்த மலை போன்ற மார்பகங்கள் இரண்டினைக் கொண்டவள் (ஆகிய) வள்ளியின் கணவனே, மேகங்கள் படிவற்கு இடமான ஏழு கடல்களும் பிளவுண்டு போகுமாறு சிதறி ஒலி செய்ய, வலிய அசுரர்களின் சேனைகள் அழிவு பட்டு இறந்து அவர்களது ரத்தம் பரவி பல திக்குகளிலும் ஓடும்படிச் செய்து விளங்கும் அழகிய திருமுகத்தை உடைய சுடர் வேலனே, தெளிவான தமிழ்ப் பாடல்களால் (உன்னை) அடியார் புகழ்ந்து பாடவும், ஆடவும், இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து, பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 478 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தானனத், மலர், உள்ள, போன்றதும், அசைகின்ற, தானதன, தய்யதன, தானனந், வன்மை, போல், புகழ்ந்து, விளங்கும், மேல், முத்துக்கள், என்னுடைய, முல்லைமலர், பெருமாளே, முல்லை, மாலை, போலவும், உடையவர்கள்