பாடல் 477 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய ...... தனதான |
இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர் மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல இடுகாட்டி னெல்லை ...... நடவாத வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல் மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல குறவாட்டி புல்லு ...... மணிமார்பா அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. |
இருளைப் போன்ற கரிய செழிப்புற்ற நெருங்கிய கூந்தலைக் காட்டி, வில் போன்ற நெற்றிப் புருவத்தைக் காட்டி, வெல்லக் கூடிய இரு அம்புகளின் இயலைக் காட்டும், கொல்லும் தன்மையை உடைய, குவளை மலர் போன்ற கண்களைக் காட்டி, முல்லை வரிசை போன்ற பற்களைக் காட்டும், கொடி போன்ற இடையுடைய பொது மாதர் மீது காம மயக்கம் காட்டி, அதனால் வரும் வறுமையைக் காட்டுகின்ற சம்சார வாழ்க்கை என்னும் சுடுகாட்டின் முடிவை அடையாதபடி, எனக்கு நல்வழி காட்டியும், நல்ல அறிவைக் காட்டியும், மெல்ல எனது வினையை வாட்டியும் (காப்பாயா அல்லது) எனக்கு மேலும் துன்பம் செய்யலாகுமோ? ஞானவழியைக் காட்டுகின்ற பழமையான வேத மொழிகள் காட்டும் வளமையான உபதேச மொழியை எனக்குக் காட்டிய சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள இளம்பூரணனே, தினை விளையும் புனத்திற்கு வழியைக் காட்டவல்ல குறமகளாம் வள்ளி தழுவுகின்ற அழகிய மார்பனே, அருள் நெறியைக் காட்டுகின்ற கல்வி வழியைக் காட்டும் செல்வனே, ஆற்றலைக் காட்டிய வலிய அசுரர்களைக் கோபித்து அழித்தவனே, நின் திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 477 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, காட்டும், காட்டுகின்ற, தனதாத்த, வல்ல, நல்ல, தய்ய, நின், வழியைக், காட்டிய, காட்டியும், பெருமாளே, முல்லை, மெல்ல, கல்வி, எனக்கு