பாடல் 472 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ஆபோகி;
தாளம் - கண்டசாபு - 2 1/2
தந்தனத் தானதன தந்தனத் தானதன தந்தனத் தானதன ...... தந்ததான |
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன் நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை நங்களப் பாசரண ...... மென்றுகூறல் உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல் உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார் உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர் உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய் கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய் அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம் அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே. |
விஷம் போல மனத்தில் வஞ்சகம் கொண்டவர்களை நம்புதல் கெடுதலாகும் என்று நினைத்து அடியேன் நட்பு பெருக உன் திருவடிகளில் அன்போடு தேடி உன்னை எங்கள் அப்பனே சரணம் என்று கூவி முறையிடும் கூச்சல் உனது செவிகளில் விழவில்லையா? தேவிகள் வள்ளி தேவயானை மேல் கண்பார்வையால் கேட்கவில்லையா? உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி யார் வரம்பு மீறுவர்? என்னைக் காக்கும் பாரம் உந்தனுக்கே ஆகும். உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணைவர் உள்ளனர்? தேவர்களுக்கு அருளியதுபோல் என்முன்னும் தோன்றி அருள்க. பிரமனை எட்டி அவனது முடியில் முன்பு நன்றாகக் குட்டி மிக்க களிப்புடன் வீசிய சிவந்த கையை உடையவனே, கயல் மீன் போன்ற கண்ணாள் குற வள்ளியின் அழகிய தோளை அணைக்கும் பொன் தோளாய், உடலைச் சட்டை தழுவுவது போல இறுக்க அணைத்தவனே, கிரெளஞ்ச மலைகள் ஏழும் நடுங்க, கடல் நீர் வற்றி ஒடுங்க, அசுரர் குலத்தை விண்ணிலேறும்படி கொன்ற கந்தவேளே, அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையார் சிவபெருமானின் அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) அம்பலத்தில் ஆடும் நடராஜர் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 472 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனத், தானதன, யார், அழகிய, தம்பிரானே, கந்தவேளே, உன்னை