பாடல் 470 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - மோஹனம்;
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2
- எடுப்பு - 1/2 இடம்
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தனதன தானான தானன தனதன தனதன தானான தானன தனதன தனதன தானான தானன ...... தந்ததான |
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம் அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத கவடனை விகடனை நானாவி காரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங் களியனை யறிவுரை பேணாத மாநுட கசனியை யசனியை மாபாத னாகிய கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ மவுலியி லழகிய பாதாள லோகனு மரகத முழுகிய காகோத ராஜனு மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும் மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர் மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும் சிவசிவ ஹரஹர தேவா நமோநம தெரிசன பரகதி யானாய் நமோநம திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந் திருதரு கலவி மணாளா நமோநம திரிபுர மெரிசெய்த கோவே நமோநம ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே. |
துர்க்குணம் படைத்த தந்திரசாலியான என்னை, வேதாளமே உருவெடுத்தது போன்ற உருவத்தினனான என்னை, முட்டாளும் குணம் கெட்டவனுமான என்னை, ஆசாரக் குறைவுபட்டவனான என்னை, கதியற்றவனை, மலை வேடனைப் போன்ற என்னை, வீம்பு பேசும் வாயையுடைய என்னை, ஐம்பூதங்களின் சேர்க்கையான பயனற்ற உடலை உடைய என்னை, மூடர்களுக்குள் தலைமையான மூடனாகிய என்னை, அழிந்து போகும் கருவில் வந்த வீணருள் தலையான வீணனை, அழுகிப் போனஅவிந்து போன பண்டமாகிய என்னை, அறுசுவை உணவை விரும்பி உண்ணும் என்னை, அன்பில்லாமல் கபடமே குடிகொண்ட நெஞ்சினனான என்னை, உன்மத்தம் கொண்ட என்னை, பலவித மனவிகாரங்களுள்ள என்னை, கோபியை, மிகுந்த மூதேவித்தனம் உடைய சனியனை, ஆண்மையற்றவனாகிய என்னை, நிலையற்ற வாழ்வு வாழும் என்னை, வீணாகி விழும் பெருங்குடியனாகிய என்னை, நல்ல நெறி உரைகளை விரும்பாத மனிதப்பதர் போன்ற என்னை, இடிபோன்ற குரலனை, மகா பாதகனை, கதியேதும் அற்ற என்னை, இத்தகைய நாயினும் கீழான என்னை நீ ஆண்டருளும் நாள் உண்டோ? மணிமுடிகள் அழகாக உள்ள பாதாளலோகனாகிய ஆதிசேஷனும், பச்சை நிறம் உடல் முழுதும் உள்ள சர்ப்பராஜன் பதஞ்சலியும், மநு நீதியுடன் ஆளும் சோழநாட்டரசர் தலைவன்அநபாயனுடன் தேவர்கள் புடைசூழ வரும் இந்திரனும், புகழ்கின்ற புலியூர் சிதம்பரத்தில் வாழ்கின்ற சபாநாயகர் நடராஜரும் அவர் அருகில் இளமயில் போல நிற்கின்ற சிவகாமசுந்தரியும் மகிழ்ச்சி அடைய வானில் உள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும், மலைமகள் பார்வதி பெற்ற செல்வமே, மனத்துக்கு இனியவனே, பொன்னம்பலத்தில் நடனமாடும் சிவசிவ ஹரஹர தேவா*, போற்றி, போற்றி, கண்டு களிக்க வேண்டிய மேலான கதிப் பொருளானாய், போற்றி, போற்றி, எல்லாத் திசைகளிலும், இசைகளிலும் வாழ்பவனே, போற்றி, போற்றி, இனிய சொற்களையே பேசுகின்ற வள்ளிநாயகியின் இன்ப மணவாளனே, போற்றி, போற்றி, திரிபுரத்தை எரித்த தலைவனே*, போற்றி, போற்றி, ஜெயஜெய ஹரஹர தேவா, தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே.
* நடராஜனும் முருகனும் ஒருவரே என்னும் கருத்துப்பட அருணகிரிநாதர் பாடுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 470 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னை, போற்றி, தனதன, நமோநம, ஹரஹர, உள்ள, தகதிமி, தேவா, தானன, தானான, உடைய, வீணனை, ஜெயஜெய, தம்பிரானே, சிவசிவ