பாடல் 468 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தன தானன தான தந்தன தந்தன தானன தான தந்தன தந்தன தானன தான தந்தன ...... தந்ததான |
சந்திர வோலைகு லாவ கொங்கைகள் மந்தர மாலந னீர்த தும்பநல் சண்பக மாலைகு லாவி ளங்குழல் ...... மஞ்சுபோலத் தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை விண்புரு வாரிதழ் கோவை யின்கனி தன்செய லார்நகை சோதி யின்கதிர் ...... சங்குமேவுங் கந்தரர் தேமலு மார்ப ரம்பநல் சந்தன சேறுட னார்க வின்பெறு கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ...... ரம்பையாரைக் கண்களி கூரவெ காசை கொண்டவர் பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு கண்களி ராறுமி ராறு திண்புய ...... முங்கொள்வேனே இந்திர லோகமு ளாரி தம்பெற சந்திர சூரியர் தேர்ந டந்திட எண்கிரி சூரர்கு ழாமி றந்திட ...... கண்டவேலா இந்திரை கேள்வர்பி தாம கன்கதி ரிந்துச டாதரன் வாச வன்தொழு தின்புற வேமனு நூல்வி ளம்பிய ...... கந்தவேளே சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு பெண்கள்சி காமணி மோக வஞ்சியர் செந்தினை வாழ்வளி நாய கொண்குக ...... அன்பரோது செந்தமிழ் ஞானத டாக மென்சிவ கங்கைய ளாவும காசி தம்பர திண்சபை மேவும னாச வுந்தர ...... தம்பிரானே. |
சந்திரனைப் போல் குளிர்ந்த ஒளியைத் தரும் காதோலை விளங்க, மார்புகள் மந்தர மலையைப் போல் அசைய, நல்ல குளிர்ச்சி ததும்பும் அழகிய சண்பக மாலை விளங்கும் மெல்லிய கூந்தல் மேகம் போல் விளங்க, குளிர்ந்த மீன் போன்றதும் அம்பு போன்றதுமான கண்களை உடையவர்கள். விண்ணில் விளங்கும் இளம் பிறைச் சந்திரன் போன்ற புருவத்தை உடையவர்கள். கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள். பொது மகளிர்களுக்கே உரித்தான காம லீலைகளைச் செய்பவர்கள். சூரிய ஒளி போன்ற பல்வரிசையும், சங்கு போன்ற கழுத்தையும் உடையவர்கள். தேமல் மார்பில் பரவ, நல்ல சந்தனக் கலவையின் நிறைந்த அழகைப் பெற்ற மார்பின் மேல் ரவிக்கை அணிந்த, அழகிய தொண்டையினின்றும் உண்டான ஒலி கொஞ்சுகின்ற, தேவலோகத்து ரம்பை போன்ற விலைமாதர்கள் மீது, கண்கள் மகிழ மிக்க ஆசை பூண்டு, அவர்களுடன் மெத்தை மீது குலவி விளையாடினும், உனது அழகிய பன்னிரண்டு கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் என் மனதில் கொண்டு உன்னைத் தியானிப்பேன். இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில் இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலனே, லக்ஷ்மியின் கணவராகிய திருமாலும், பிரமனும், ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே, தரும சாஸ்திரத்தை எடுத்து ஓதிய கந்த வேளே. செங் குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், உன் ஆசைக்கு உகந்த வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளிக்கு நாயகனே, செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தடாகம்* விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில், திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே.
* இத் தீர்த்தத்தில் நீராடினால் செந்தமிழ் ஞானம் பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 468 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, உடையவர்கள், அழகிய, விளங்கும், செந்தமிழ், போல், தானன, சந்திர, மீது, பன்னிரண்டு, என்னும், இன்பம், மந்தர, நல்ல, லாவி, இந்திர, தம்பிரானே, சண்பக, விளங்க, குளிர்ந்த, கண்களி