பாடல் 467 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான |
முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ...... குழையாட முழவங்கர கமுகம்பரி மளகுங்கும வாச முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில் முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கொடிபோலத் துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித் தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும் சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ...... கதிர்வேலா வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில் மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் ...... பெருமாளே. |
முகம், சந்திரன். புருவம், வில். கண், கயல் மீன். கரிய மேகம் போன்றது அழகிய கூந்தல். ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட, பேச்சும் கிளி போன்றது. வாயிதழ், தாமரை. பற்கள் சங்கின் ஒளி கொண்டன. காதில் குண்டலங்கள் அசைவன. அழகிய கையிணைகள் (வளையல்களால்) ஒலி செய்ய, வாசனை உள்ள செஞ்சாந்தின் நறு மணம் கொண்ட மார்பகங்கள் என்னும் இன்பச் சாறு பொருந்திய குடத்துக்கும், மலைக்கும் ஒப்பாகி, பரந்த மார்பில் நிறத்தில் மாறுபடும் சிறிய பவள வடமும், முத்து மாலையும் அசைந்தாட, கொடி அசைவது போல, பவளக் கொடி ஒடிவது போன்ற இடை துவள, நடனம் செய்து, வாழை போன்ற தொடை மறையும்படி அசைந்தாடுகின்ற, அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு, நெருங்கிய பஞ்சு மெத்தையில் மன்மதன் ரதியும் போல இன்பம் தரும் லீலைகளைச் செய்து, மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்கு அருள் செய்வாயாக. அகர எழுத்தைப் போல் தனித்தும் வேறாக இருந்தும் ஆன்மாக்கள் உய்ய வழி காட்டும் திருமால்* ஆகி, என் கண்ணில் விளங்கும் சுடர் ஒளியாம் சிவகாமியாகிய, அமுதத்தைப் பொழியும் பராசக்தி உமா தேவியின் பாகத்தில் உறையும் சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையே, அசுரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவை எல்லாம் கெட, (அவனுக்குக் காவலாயிருந்த) எழு கிரி, அம்பு முதலிய பல படைகளும் பொடிந்து தூளாக, கடலும், கிரவுஞ்ச மலையும் சாய்ந்து விழ, போரை மேற் கொண்டு வேலைச் செலுத்திய செவ்விய கரத்தினனே, ஒளி வீசும் செஞ்சுடர்ச் சூரியனைப் போல விளங்குபவனே, மகர மீனைக் கொடியாகவும் நிலவைக் குடையாகவும் உடைய மன்மதனின் அழகிய தந்தையாகிய திருமாலின் மருமகன் என்று அழகிய வெற்றிச் சின்னமும், முரசம் என்னும் பறைகளும், சாஸ்திர நூல்களும் புகழ்ந்து நிற்க, பிரமனின் தலை உடையும்படி (அவனைக் குட்டி) திருவிளையாடல் கொண்டவனும், பொன்னின் நிறத்தை உடையவனும் ஆகிய ஒளி வீசும் வேலனே, அழகு நிறைந்த இந்திரனுடைய மகளாகிய தேவயானையோடு அழகிய திருமணத்தைச் செய்து கொண்டு, (பின்பு) காம லீலைகளை குறப் பெண் வள்ளியோடு விளையாடி, திருவளரும் தென்புலியூரில் (சிதம்பரத்தில்) யாவரும் கண்டு களிக்கும் திருவம்பலத்தில் விளங்கும் குமரேசப் பெருமாளே.
* திருமாலும் உமாதேவியும் ஒரே அம்சத்தினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 467 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதந்தன, அழகிய, செய்து, கொண்டு, வீசும், கொடி, விளங்கும், கூந்தல், என்னும், போன்றது, வாழை, மார்பில், மறையும்படி, பெருமாளே, சந்திரன், வில்