பாடல் 466 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த ...... தனதான |
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம் வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார் விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள் மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம் நவதுங் கரத்ந முந்து ...... திரடோளுஞ் சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல் திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே. |
மதம் கொண்ட கொடிய யானையின் இரண்டு வலிமையான கொம்புகள் என்று சொல்லும்படியாக, திரட்சியுற்று வளர்கின்ற மார்பகங்கள் மீது அணிந்துள்ள ரத்தின மாலை, செங்கையில் வளைகள், இவைகள் ஒளி சிறந்து விளங்குவதைப் பார்த்து எல்லாவற்றையும் துறந்தவர்களான சான்றோர்களும் திகைப்புற்று மனம் நெகிழும்படி வருகின்ற மான் போன்ற மாதர்களின் விதம் விதமான இன்பம் தரும் செயல்களையும், சிரிப்புடன் கொஞ்சிப் பேசும் குணங்களின் மேம்பாட்டையும் பார்த்து, அவை மனத்தில் அழுந்த, உள்ளம் கலங்கி மோக மயக்கம் கொள்ளாமல், ஆசை விட்டொழிந்து, சிறிதேனும் சந்தேகம் கொள்ளாமல் உன்னை உணர்ந்து, உன்னைச் சுற்றி வலம் வந்து, உன்னைப் புகழ்ந்திட, மிக மேலான, அழகிய திருவடிகளைத் தந்து அருளுக. கங்கை ஆற்றையும், அழகிய கரந்தை மலரையும், பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்தவரும், நடனம் ஆடுகின்றவருமான நடராஜப் பெருமான் பொருந்தி வீற்றிருந்த கயிலாய மலையை, தனது கையால் பிடுங்க முயன்ற அசுரனாகிய ராவணனுடைய தலைகளும், உடலும், உயர்ந்த நவரத்தின மாலை விளங்கும் திரண்ட தோள்களும் சிதைந்து போகும்படி ஒப்பற்ற அம்பை முன்பு செலுத்தியவரும், மேகம் போன்று கரு நிறம் கொண்டவரும், வலிமை விளங்கும் செவ்விய கண்களை உடையவருமான ராமனின் (திருமாலின்) மருகனே, நாள்தோறும் உன்னைத் தொழுவதின் பயனை உணர்ந்த தேவர்கள் உன்னைத் தாழப் பணிந்த திரு அம்பலத்தே (சிதம்பரத்தில்) அமர்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 466 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, தனனந், ணிந்த, தந்த, அழகிய, கொள்ளாமல், விளங்கும், பார்த்து, உன்னைத், கயிலாய, ரண்டு, ணர்ந்து, பெருமாளே, மாலை