பாடல் 464 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான |
தியங்குஞ்சஞ் சலந்துன்பங் கடந்தொந்தஞ் செறிந்தைந்திந் த்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை திதம்பண்பொன் றிலன்பண்டன் தலன்குண்டன் சலன்கண்டன் தெளிந்துன்றன் பழந்தொண்டென் ...... றுயர்வாகப் புயங்கந்திங் களின்துண்டங் குருந்தின்கொந் தயன்றன்கம் பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி புகழ்ந்துங்கண் டுகந்துங்கும் பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும் புலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய் இயம்புஞ்சம் புகந்துன்றுஞ் சுணங்கன்செம் பருந்தங்கங் கிணங்குஞ்செந் தடங்கண்டுங் ...... களிகூர இடும்பைங்கண் சிரங்கண்டம் பதந்தந்தங் கரஞ்சந்தொன் றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா தயங்கும்பைஞ் சுரும்பெங்குந் தனந்தந்தந் தனந்தந்தந் தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ...... சிறுகூரா தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ் சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந் தலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே. |
அறிவைக் குழப்பும் மனக் கவலை, துயரம் ஆகியவை கொண்ட இந்த உடலில் சம்பந்தப்பட்டு நெருங்கியுள்ள ஐந்து பொறிகளின் பாசத்தால் உண்டாகும் துன்பத்தில் வேதனைப்படும் அறிவிலி நான். நிலைத்த நற் குணம் ஒன்றும் இல்லாதவன் நான். ஆண்மை இல்லாதவன், கீழ்மையானவன், இழிந்தவன், கோபம் மிகுந்தவன் ஆகிய நான், மனத் தெளிவை அடைந்து உன்னுடைய பழைய அடியவன் என்னும் உயர் நிலையை அடையும்படி, பாம்பு, பிறைச் சந்திரன், குருந்த மலரின் கொத்து, பிரமனுடைய (தலை) கபாலம், பொருந்திய (கங்கை) நீர் இவை சேர்ந்த அழகிய செஞ்சடையரான சிவபெருமான் புகழ்ந்தும், பார்த்து மகிழ்ந்தும் (உன்னை) வணங்குகின்ற, செம்பொன்னாலாகிய சிலம்புகள் எப்போதும் ஒலி செய்கின்ற (உனது) தாமரைத் திருவடிகளைத் தந்தருளி, என்னுடைய குறைகளைத் தீர்த்து வைப்பாயாக. சொல்லப்படுகின்ற நரிகள், நெருங்கும் நாய்கள், சிவந்த கழுகுகள், ஆங்காங்கே கூடி நிற்கும் ரண களத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிகும்படி, அசுரர்களுக்குத் துன்பம் உண்டாக (அவர்களின்) கண், தலை, கழுத்து, கால், அவரவர்களுடைய கைகள், ஒன்றுக்கொன்று பிணைந்திருந்த எலும்புகள், இவை எல்லாம் அழிவுபடும்படி துண்டு துண்டாக்கிய வேலனே, ஒளி வீசும் பசுமையான வண்டுகள் எல்லா இடத்திலும் தனந்தந்தந் தனந்தந்தம் என்ற ஒலியுடன் குளங்களில் உள்ள குளிர்ந்த தாமரை மலர்களில் கொஞ்சுகின்ற சிறுகூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, தவத்தை மேற்கொண்டும், மந்திரங்களுடன் கூடிய ஜெபத்தை மேற்கொண்டும், சிவ ஞானத்தாலும் விருப்பத்துடன் நாடி (அடியவர்கள்) அடைகின்ற தலமாகிய பொன்னம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 464 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தந்தம், நான், தனந்தந்தந், மேற்கொண்டும், பார்த்து, இல்லாதவன், பெருமாளே, என்னும்