பாடல் 458 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனத்தத்தம் தனத்தத்தத் தனத்தத்தம் தனத்தத்தத் தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான |
கதித்துப்பொங் கலுக்கொத்துப் பணைத்துக்கொம் பெனத்தெற்றிக் கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின் கழுத்தைப்பண் புறக்கட்டிச் சிரித்துத்தொங் கலைப்பற்றிக் கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர் பதித்துத்தந் தனத்தொக்கப் பிணித்துப்பண் புறக்கட்டிப் பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப் பறித்துப்பின் துரத்துச்சொற் கபட்டுப்பெண் களுக்கிச்சைப் பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற் கொதித்துச்சங் கரித்துப்பற் கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக் கழித்துப்பண் டமர்க்குச்செப் பதத்தைத்தந் தளித்துக்கைக் கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா சிதைத்திட்டம் புரத்தைச்சொற் கயத்தைச்சென் றுரித்துத்தற் சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ் செவிக்குச்செம் பொருட்கற்கப் புகட்டிச்செம் பரத்திற்செய்த் திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே. |
நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச் செழிப்புற்று, கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும், தொங்கும் ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப் பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப் பதித்து, தாம் பெற்ற பொருளுக்குத் தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து இன்முகம் காட்டி ஏய்த்தும், பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப் போகுமளவும் கைப்பற்றி, பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு, பின்னர் வருத்தத்தை அடைந்து திரிவேனோ? விரைந்து எழுந்து எதிர்த்து, பிறகு கோபம் கொண்டு அழித்து, பற்களைக் கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை ஒழித்து, முன் ஒரு நாளில் தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி, கையில் அலங்காரமாக அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக ஒளி விடும் வேலை ஏந்தியவனே, அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த யானையிடம் சென்று அதன் தோலை உரித்து, தான் என்னும் அகங்காரம் கொண்ட தக்ஷன் தலையை அறுத்துத் தள்ளிய சிவபெருமானுடைய திருச்செவிக்குள் பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி, செவ்விய மேலான வகையில் அமைந்த திருச் சிற்றம்பலத்தில் (சிதம்பரத்தில்) எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 458 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத்தம், அழகிய, கொண்ட, தனத்தத்தத், பின்னர், சென்று, செவ்விய, அடைந்து, நன்றாகக், பெருமாளே, உடைய, விலைமாதர்களின், பெற்ற