பாடல் 457 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - தர்பார்;
தாளம் - ஆதி - 4 களை - 32
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தந்த தந்தனத் தான தந்ததன தந்த தந்தனத் தான தந்ததன தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான |
வந்து வந்துவித் தூறி யென்றனுடல் வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும் வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும் எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி சுந்த ரந்திருப் பாத பங்கயமும் என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய் அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத் தோட கெந்தருவ ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன் அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ...... செங்கைவேலா சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற மங்கை யின்புறத் தோள ணைந்துருக சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே சிந்தி முன்புரக் காடு மங்கநகை கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ் செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே. |
உலகிலே தோன்றித் தோன்றி, விந்தாகிய சுக்கிலத்தில் ஊறி ஊறி, என் உடலானது வெந்து போய் வெந்து போய், இவ்வாறு ஓடுவதனால் வாடி, உயிரும் பல பிறப்பு எடுப்பேன் என்று சபதம் செய்ததுபோல கணக்கற்ற உருவங்களை எடுத்து, அழிந்து அழிந்து போய் விட்ட என்னை, உன் திருவுள்ளம் மகிழ்ச்சியுடன் ஏற்று ஆட்கொண்டருள, நீ எழுந்தருளி, உன் யானை வாகனத்தில்* ஏறி, தேவர்களும் அடியார்களும் சூழ்ந்து வர, எனது மாயை நிறைந்த பிறவிக்காடு பட்டழிய, சந்தமுடன் இசை பாடியவராக அருகில் நெருங்கி வரும், பாட்டிலேவல்ல தேவ மங்கையர் பக்தியில் கனிவுற்று, பந்தடித்து நடனத்துடன் கூடிவர, வண்டுகள் விரும்பி மொய்க்கும் கடப்பமாலை அணிந்த தோள்களும், அழகிய பொன்முடியும், காண்போர் விரும்பும் எழிலான திருவடித் தாமரைகளும், என் முன்பே முற்புற நீ தோன்றி, உன்னையே நினைக்கும்படியான உள்ளத்தை எனக்குத் தந்தருள்வாயாக. விண்ணில் உள்ளார் பிரமித்து ஓட, வித்யாதரர்கள் மனக்கவலையுடன் ஓட, கந்தர்வர்களும், பிரமனும் மனம் சோர்வடைந்து ஓட, எட்டுத்திசையிலும் பரந்த பூமியை உண்ட மாயனாம் திருமாலும் அச்சமுற்று உன் திருவடி சேவையைத் தந்து காத்தருள்க எனக் கூற, எதிர்த்து வந்த கோபத்தினரான அசுரர்களின் காடு போன்ற பெருங் கூட்டம் எரிபட்டு விழ, நெருப்பின் தன்மையை உடைய வேலைச் செலுத்திய செங்கை வேலனே, யானைத் தந்தங்கள் அனைய மார்புடைய குறத்தி வள்ளி மகிழும்படியாக, அவளது தோள்களை அணைந்து உருகி நின்றவனே, யானை வளர்த்த தேவயானையைச் சிறப்புடன் திருமணம் செய்து கொண்ட கந்தவேளே, முன்பு, திரிபுரங்கள் என்ற காடு சிதறுண்டு அழிய, சிரிப்பாலே பெரு நெருப்பை ஏவிய செந்தழலின் நிறத்தை உடையவரும், தேவர்கள் புகழும் செம்பொற் சபையிலே திருநடனம் புரிந்தவருமான அம்பலவாணராம் சிவபெருமானின் குருநாதத் தம்பிரானே.
* அடியார்களை ஆட்கொள்ள முருகன் பிணிமுகம் என்ற யானை வாகனத்தில் வருவதாக ஐதீகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 457 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காடு, போய், யானை, வெந்து, தந்தனத், தந்த, கொண்ட, தம்பிரானே, தோன்றி, அழிந்து, கந்தவேளே, சிந்தை, வந்து, தந்ததன, யுன்றனது, தகிட, வந்த, சிந்து