பாடல் 456 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -.... தாளம்
-
தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன ...... தந்ததான |
மந்தர மென்குவ டார்த னங்களி லார மழுந்திட வேம ணம்பெறு சந்தன குங்கும சேறு டன்பனி நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல் வாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை வாட நடம்புரி வார்ம ருந்திடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் மோக னவஞ்சியர் போல கம்பெற வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர் போல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச் சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர் வாரு மெனும்படி யால கங்கொடு பண்சர சங்கொள வேணு மென்றவர் சேம வளந்துறு தேன ருந்திட துன்றுபொ னங்கையின் மீது கண்டவ ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ...... மங்கையோரால் துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு சீபு ழுவுஞ்சல மோடி றங்கிய புண்குட வன்கடி யோடி ளஞ்சனி சூலை மிகுந்திட வேப றந்துடல் துஞ்சிய மன்பதி யேபு குந்துய ராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய் அந்தர துந்துமி யோடு டன்கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய ரிந்திர சந்திரர் சூரி யன்கவி வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி அம்புய னந்திரு மாலொ டிந்திரை வாணி யணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர் அம்பர ரம்பைய ரோடு டன்திகழ் மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர் அம்புவி மங்கைய ரோட ருந்ததி மாதர் புகழ்ந்திட வேந டம்புரி அம்புய செம்பதர் மாட கஞ்சிவ காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தன னாவெ னும்பறை செந்தவில் சங்குட னேமு ழங்கசு ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில் வாழு மிளங்கொடி யாள்ப தங்களில் வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு தாள ழகங்கையின் வேலு டன்புவி செம்பொனி னம்பல மேல கம்பிர கார சமந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே. |
மந்தரம் என்று சொல்லப்பட்ட மலை போன்ற மார்பகங்களில் (கழுத்தில் அணிந்துள்ள) பொன் மாலை அழுந்திக் கிடக்க, நறுமணம் கொண்ட சந்தனம், செஞ்சாந்து இவற்றின் கலவைச் சேறுடன் பன்னீர்களைக் கலந்து பூசி வைப்பவர்கள். சந்திரன் போன்ற முகத்தை உடையவர்கள். மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள். அம்பு, கயல் மீன், வாள் (இவைகளைப் போன்ற) கண்கள். செங்கழுநீர் மலர் நிரம்ப வைத்துள்ள கூந்தல். (காதணியாகிய) ஓலைச் சுருள் விளங்கும் நன்றாகச் சுருண்டுள்ள காதுகளை உடையவர்கள். துவள்கின்ற இடை வாடும்படி நடனம் செய்பவர்கள். (வசிய) மருந்தை இடும் மாய வித்தைக்காரர்கள். கொஞ்சுபவர். இளம் குயில் போல்பவர். காம மயக்கம் தர வல்ல வஞ்சிக் கொடி போல்பவர். தமது வீட்டை அடைந்து வந்தவர்களை நீர் எந்த ஊரைச் சேர்ந்தவர், முன்பே பழக்கம் உள்ளவர் போல் இருக்கின்றதே என்றெல்லாம் பேசி காம மயக்கம் வரும்படி இனிய சொற்களைப் பேசி அழகாக உற்ற நேசத்துடன் அருகில் வந்து வரவேற்று வீட்டுக்கு உள்ளே அழைத்து தமது இசைப் பாட்டால், காமச் சேட்டைகள் உண்டாக வேண்டும் என்ற எண்ணத்துடன் (வந்தவருடைய) செல்வம் என்கின்ற வளம் செறிந்த தேனை உண்ணும் பொருட்டு பொருளைக் கவர, கிட்டிய பொன்னை உள்ளங்கை மேல் கண்டவுடன் அவருடன் விருப்பம் காட்டிச் சேர்ந்து இன்பம் அடைகின்ற விலைமாதர்களால், துயரமும், முடக்குவாதம் முதலிய உடலை அழிக்கும் நோய்களும், சிரங்குடன் சீயும், புழுவும், நீரும் ஒழுகுகிற புண்கள், குடவுண்ணியால் ஏற்பட்ட விஷக் கடியுடன், இளமையில் வந்த ஜன்னி நோய், சூலை நோய் - இவை எல்லாம் பெருகிடவே, பறந்து போய் உடல் அழிவுற்று, யமன் ஊரில் புகும் துன்பக் கடலை நான் கடக்கும்படி, உனது சீரான திருவடியைப் பெற வல்ல மந்திரத்தைத் தந்து அருளுக. ஆகாயத்தில் ஒலிக்கும் துந்துமி என்னும் பேரிகையோடு, கண நாதர்கள் புகழ, வேதத்தில் வல்லவர்கள், இந்திரன், சந்திரன், சூரியன், புலவர்கள், தவசிகள், வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரமன், அழகிய திருமால் (மற்றும்) லக்ஷ்மி, சரஸ்வதி தேவியுடன் அரிய தவ முனிவர்களின் மனைவிகள், விண்ணுலகில் உள்ள ரம்பை முதலான தேவ மாதர்களுடன், விளங்கும் சிறப்புடைய நாக லோக மாதர்களும், அழகிய மண்ணுலக மாதர்களும், அருந்ததி ஆகிய மாதர்களும் புகழ்ந்திடவே, நடனம் புரிகின்ற, தாமரை ஒத்த செவ்விய திருவடியை உடைய சிவபெருமானது பக்கத்திலும் உள்ளத்திலும் உள்ள சிவகாம சுந்தரியாள் உமாதேவி பெற்ற கந்த வேளே, திந்திமி திந்திமி தோதிமிந்திமி தீததி திந்தித தீதிதிந்திமி தந்தன தந்தன னாதனந்தன தானதனந்தனன என்ற ஓசையுடன் ஒலிக்கும் பறைகளும், செவ்விய மேள வகைகளும், சங்குடன் முழங்க, அசுரர்களுடைய தலைகள் பொடியாகும்படிப் போகும் செயலைச் செய்த வேலாயுதனே, செந்தினைப் புனம் இருந்த அழகிய மலை நில ஊராகிய வள்ளி மலையில் வாழ்கின்ற இளமை வாய்ந்த கொடி போன்ற வள்ளி நாயகியின் பாதங்களில் வந்து வணங்கி நின்று, அவளது திருமுகத் தரிசனத்தைப் பெற்ற திருவடி அழகனே, அழகிய கையில் வேலாயுதத்துடன் பூமியில் (தில்லையில்) செம் பொன் அம்பலத்தில் உள்ள, பிரகாரங்களோடு கூடிய திருக் கோயிலில் வீற்றிருந்து அருளும் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 456 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, திந்திமி, அழகிய, தனந்தன, உடையவர்கள், உள்ள, மாதர்களும், கொடி, பேசி, தமது, வந்து, ஒலிக்கும், பெற்ற, செவ்விய, வல்ல, வள்ளி, நோய், நடனம், புகழ்ந்திட, அம்புய, துந்துமி, சூலை, ரோடு, யாள்ப, தம்பிரானே, போல்பவர், விளங்கும், சந்திரன், பொன், மயக்கம்