பாடல் 450 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ஜோன்புரி;
தாளம் - ஆதி
தத்ததன தான தத்ததன தான தத்ததன தான ...... தனதான |
கைத்தருண சோதி யத்திமுக வேத கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண் கற்புசிவ காமி நித்யகலி யாணி கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண் வித்துருப ராம ருக்குமரு கான வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண் வெற்புளக டாக முட்குதிர வீசு வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண் சித்ரமுக மாறு முத்துமணி மார்பு திக்கினினி லாதப் ...... பெருமாள்காண் தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு சித்திரகு மாரப் ...... பெருமாள்காண் சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண் துப்புவளி யோடு மப்புலியுர் மேவு சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே. |
துதிக்கை உடைய, இளமை வாய்ந்த, ஒளிமயமான, யானைமுகமுடைய, வேதப்பொருளான கற்பக* விநாயகனின் இளைய சகோதரப் பெருமான் நீதான். கற்பரசி சிவகாமசுந்தரியும், நித்திய கல்யாணியுமான பார்வதியின் தலைவரான சிவனாரின் குருநாதப் பெருமான் நீதான். மழைத்துளி பெய்யும் மேகத்து வண்ணனான இராமருக்கு மருமகனாகி வெற்றி வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமான் நீதான். மலைகள் உள்ள அண்டகோளங்கள் அஞ்சும்படி தோகையை வீசும் வெற்றி மயிலை வாகனமாகக் கொண்ட பெருமான் நீதான். அழகிய முகங்கள் ஆறும், முத்துமாலைகள் அணிந்த மார்பும், வேறு எந்தத் திசையிலும் காணமுடியாத பேரழகுப் பெருமான் நீதான். தித்திமிதி தீது என தாளமிட்டு விளையாடுகின்ற அழகிய குமாரப்பெருமான் நீதான். சுத்த வீரனே, சூரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனும், சிறந்த கவியரசனாகியவனும் ஆன பெருமான் நீதான். தூயவளான வள்ளியுடன் அந்தப் புலியூர் (சிதம்பரம்) தலத்தில் மேவி, சுத்த சிவஞான உருவான பெருமாளே.
* சிதம்பரத்தில் மேற்கு கோபுரத்தின் வாயிலில் வீற்றிருக்கும் கணபதிக்கு கற்பக விநாயகர் எனப் பெயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 450 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நீதான், பெருமாள்காண், பெருமான், தத்ததன, வெற்றி, சுத்த, அழகிய, பெருமாளே, தித்திமிதி