பாடல் 442 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தானாதன தனதன தானாதன தனதன தானாதன ...... தனதான |
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல விழிகொடு வாபோவென ...... வுரையாடும் விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள் ம்ருகமத கோலாகல ...... முலைதோய அடையவு மாசாபர வசமுறு கோமாளியை அவனியு மாகாசமும் ...... வசைபேசும் அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை அடியவ ரோடாள்வது ...... மொருநாளே வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம் வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம மரகத நாராயணன் மருமக சோணாசல மகிபச தாகாலமு ...... மிளையோனே உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற உலகுய வாரார்கலி ...... வறிதாக உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ ஒருதனி வேலேவிய ...... பெருமாளே. |
செருக்கு உள்ள மன்மதன் செலுத்தும் அம்பு போல வேகம் பெற்றுள்ள, ஆலகால விஷம் போன்ற கண்களைக் கொண்டு, வா என்றும் போ என்றும் பேசுகின்ற சாமர்த்தியத்துடன் நூறாயிரக் கணக்கான மனத்தை உடைய பெரிய பாவிகளான விலைமாதரின், கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான மார்பகங்களை அணைந்து சேர ஆசைப் பிரமை பூண்ட கோணங்கியை, மண்ணுள்ளோரும், விண்ணுள்ளோரும் பழிப்புரை பேசும் முட்டாளான துராசாரனை, பயனற்றவனை, அசுத்தனை, உனது அடியார்களோடு ஆண்டருளுவதும் ஒரு நாள் ஆகுமோ? வடக்கே கோபாலர் குலத்தவரான இடையர்களின் ஒரு பதினாயிரம் மாதர்களது தோள்களை அணைந்த அழகிய பச்சை நிற நாராயணனுக்கு மருகனே, திருவண்ணாமலைக்கு அரசே, என்றும் இளமையாக இருப்பவனே, நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயா தேவிக்குக் கணவனாகிய சூரியனும், தேவர்கள் தலைவனான இந்திரனும் இறந்து படாமல் வாழ, உலகம் பிழைக்க, நீண்ட கடல் வற்றிப் போக, சிறந்த பெரிய கிரவுஞ்ச மலையும் அசுரர்களும் தூள்பட்டு விழ, ஒப்பற்ற வேலைச் செலுத்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 442 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், தனதன, தானாதன, தலைவனான, பெருமாளே, பெரிய