பாடல் 441 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - கெளரி
மனோஹரி ; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதான தத்ததன தனதான தத்ததன தனதான தத்ததன ...... தனதான |
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம் மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை தெளியாவெ னக்குமினி ...... முடியாதே சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ சிவஞான சித்திதனை ...... யருள்வாயே தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு சுகவாரி சித்தனருள் ...... முருகோனே அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும் அருணா சலத்திலுறை ...... பெருமாளே. |
வலிப்பு நோய், பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர், தாகம், மிக்க நீரிழிவு, மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி, அயர்ச்சிதரும் மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான சீறி எழும் நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல் தெளிந்த அறிவு இல்லாத எனக்கும் இனிமேல் முடியாது. மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு சிவஞான சித்தியை தந்தருள்வாயாக. நீங்காத பக்தியைக் கொண்ட திருமால் மகிழ, ஒப்பற்றதாய் ஒளி வீசும் சுதர்ஸன சக்கரத்தை அவருக்கு அருளிய ஞானமயமான பவள நிறச் சடையப்பன், புகழ்மிக்க சிவகாமியின் தலைவன், மிக்க சுக சாகரம் போன்ற சித்த மூர்த்தி சிவபிரான் அருளிய முருகனே, கடல், சூரன், கிரெளஞ்சமலை, சிங்கமுகன், ஆனைமுகனான தாரகாசுரனுடன் அசுரர்கள் யாவரும் இறக்கும்படிச் செய்த நெருப்பு வேலனே, அமுதமயமான பீடத்தினள் குறமகள் ஆகிய வள்ளியுடனும், யானை ஐராவதம் வளர்த்த பெண் தேவயானையுடனும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 441 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, நோய், தத்ததன, அருளிய, மிக்க, பெருமாளே, சிவஞான