பாடல் 440 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...:;
தாளம் -
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த தனதன தந்ததத்த ...... தனதான |
மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி முடியவ ளைந்தரற்று ...... கடலாலும் முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள் முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும் மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும் அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி னமுதத னம்படைத்த ...... திருமார்பா அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே. |
யாவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நிறம் கருமையடைந்து, மகர மீன்களின் கூட்டத்தால் கலக்கப்பட்டு, கிடைக்கின்ற முழு இடத்தையும் வளைத்து ஆரவாரம் செய்யும் கடலாலும், (சந்திரனின் கலைகள்) வளர்ந்து, விஷத்தை எங்கும் பரப்பி, (யுக முடிவில் தீப் பிரளயமாக வரும்) வடவா முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில் மூழ்கியும் எழுந்துவரும் நிலவாலும், கார்மேகம் போன்ற கூந்தலைக் கொண்ட, வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய என் மகள் அடைந்த விரக தாபம் தணியும்படிக்கு நீ நினைந்து, பச்சை நிறம், தூய்மை, வெற்றி இவைகளைக் கொண்டதாகவும், அழகுள்ள நடனம் கொண்டதாகவும் உள்ள அலங்கார மயில் மீது வந்து அவளுக்கு முக்தியைத் தரவேண்டும். அழகிய மென்மை வாய்ந்த குறத்தி வள்ளியின் புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும் பொதிந்ததுமான மார்பகத்தை அணைந்துள்ள திருமார்பனே, தேவர்களின் ஊராகிய அமராவதியிலும், அழகிய திருச்செந்தூரிலும், திருவருணை என்ற வளமான தலத்திலும் தங்கும் இறைவனே, ஏழு உலகங்களும் பிழைக்க, அசுரர்களின் தலைகள் தெறிக்கும்படியாக ஏழு மலைகளையும் தொளைத்த ஒளி வேலனே, ஆதித்தர்கள் (அதிதியின் புத்திரர்கள்), விண்ணுலகத்தவர், திருமால், ருத்திரன், தாமரை மீதமர்ந்த பிரமன் இவர்களது பயத்தை ஒழித்த பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.கடல், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 440 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தந்ததத்த, தனதன, கொண்டதாகவும், நிறம், நிலவாலும், கடலாலும், பெருமாளே