பாடல் 437 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான |
மானை விடத்தைத் தடத்தி னிற்கயல் மீனை நிரப்பிக் குனித்து விட்டணை வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை வாளை வனத்துற் பலத்தி னைச்செல மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர் மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும் ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு வூறு முபத்தக் கருத்த டத்தினை யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும் ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு பாதி யையொப்பித் துனிப்ப வத்தற வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ...... தெளியாதோ சான கிகற்புத் தனைச்சு டத்தன சோக வனத்திற் சிறைப்ப டுத்திய தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச் சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல் வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி லானை மதத்துக் கிடக்கு மற்புத சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத் தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர் சூர னைவெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே. |
மானையும், விஷத்தையும், குளத்தினில் நிரப்பப்பட்ட கயல் மீனையும், (வில்லை) வளைத்துச் செலுத்தி அணையும்படி செய்கின்ற அம்பையும், வட்டமாக வளைந்துள்ள கடலையும், கூர்மையான வேலையும், வாளையும், நீரில் மலர்கின்ற செங்கழுநீரையும், சேல் மீனையும் நிகர் என்று (அவர்களின் கண்களுக்கு) உவமையாகச் சொல்லி, அந்த விலைமாதர்களின் மாய வலையில் வசப்பட்டு, அரசிலை போன்றதும், சூதகமாம் துர் நாற்றம் நாறும் ஈனமான இடத்தை, வேகமாகக் கொழுப்பு ஊறுகின்ற ஜன்மேந்திரியமான பெண் குறியாகிய கரு உண்டாகும் இடத்தினை ஆசைப்பட்டு, உடல் வீங்கிப் பிணமாவதை, (ஸத்வம், தாமசம், ராஜதம் என்ற) முக்குணங்களோடு தடுமாறுகின்ற, கெட்டழியும் பொருளாகிய உடலை, நிலை பேறு இல்லாத செத்தை போன்ற ஒரு வேதனையை அலங்கரித்து எப்போதும் காமத்தை நினைத்து, பிறப்பில் மிகவும் மகிழ்ச்சியைக் காட்டி மயங்குகின்ற இம்மயக்கம் தெளியாதோ? சீதையின் கற்பு தன்னைச் சுட, தனது அசோக வனத்தில் சிறையில் வைத்த சேனைகளைக் கொண்ட அரக்கனாகிய ராவணனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் இறந்தொழியச் செய்தவனும், சாலையில் இருந்த மரங்களின் புறத்தில் ஒளிந்திருந்து, வன்மை வாய்ந்த வாலியினுடைய மார்பில் அம்பை எய்து, ஒப்பற்ற தாரையை சுக்கி¡£வனுக்குக் கொடுத்தவனுமான ராமபிரானின் மருகனே, விடா மழை அதிகமாகப் பொழிய, செழித்த வயல்களில் யானைகள் மயங்கிக் கிடக்கும் அற்புதமான திருவண்ணாமலையில் பரிசுத்த மூர்த்தியாக விளங்கும் அருணாசலேசுரர் அருளிய வீரனே, கடப்ப மாலை அணிந்த தோள் கொண்டு சக்ரவளாக கிரியைப் பொடியாக்கி, நெருங்கி போர்க் களத்தில் எதிர்த்து வந்த சூரனை வெட்டித் துண்டாக்கி அடக்கிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 437 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத், தத்தன, தனத்த, மீனையும், பெருமாளே, மீனை, தெளியாதோ