பாடல் 438 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனத்த தத்தன தானா தனதன தனத்த தத்தன தானா தனதன தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான |
முகத்து லக்கிக ளாசா ரவினிகள் விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள் முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் ...... முந்துசூது மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ முயற்று பொட்டிகள் மோகா வலமுறு ...... கின்றமூடர் செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள் திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள் சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ...... சிந்தைமாயத் திரட்பொ றிச்சிகள் மாபா விகளப கடத்த சட்டைகள் மூதே விகளொடு திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி ...... யென்றுசேர்வேன் தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு ...... தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ எனவொரு துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் ...... தொணடர்பேணும் அகத்தி யப்பனு மால்வே தனும்அறம் வளர்த்த கற்பக மாஞா லியுமகி ழவுற்ற நித்தபி ரானே அருணையில் ...... நின்றகோவே அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ முறித்து ழக்கிய வானோர் குடிபுக அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ...... தம்பிரானே. |
முகத்தை மினுக்குபவர். ஆசாரத்தில் குறை உள்ளவர்கள். (உடல் நலத்தை) விலைக்கு விற்கும் சிறுக்கிகள். (அன்பு) பொருந்துதல் இல்லாத மூடர்கள். முழு சாமர்த்தியம் வாய்ந்தவர்கள். காம லீலை புரியும் தந்திரசாலிகள். சூதான எண்ணம் முற்பட்டு நிற்கும் சொற்களை உடைய பொது மகளிர். காசின் மேல் உள்ள ஆசையால் மார்பினைப் பலருக்கும் விற்பவர்கள். பலவிதமான அனுபோக நுகர்ச்சிகளில் ஊக்கம் கொண்டுள்ள வேசிகள். காம மயக்கத்தால் துன்பம் அடையும் முட்டாள்கள். இப்பூமியில் வஞ்சிப்பவர்கள். நம் பக்கம் சார்ந்த நட்பினர் போலிருந்து மயக்குபவர்கள். திருட்டுத்தனம் கொண்ட பயனிலிகள். மாயையே ஒரு வடிவம் எடுத்து வந்தது போல் இருப்பவர்கள். தங்கள் சிரிப்பினால் மனதை உருக்குபவர்கள். ஆகா என்று பெரிதாகச் சிரித்து உள்ளத்தை மாய்க்கும் முற்றிய தந்திர சாலிகள். பெரிய பாவிகள். வஞ்சகம் கொண்டு புறக்கணிப்பவர்கள். (இத்தகைய) மூதேவிகளுடன் நெருங்கிக் கலத்தலை நீக்கி (உனது) இரண்டு அழகிய திருவடிகளை இனி எப்போது அடைவேன்? தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்து குத்திகு தீதோ இவ்வாறான தாள ஒத்துக்களுடன் ஒப்பற்றதாய்த் தொடங்கும் ஆடலை ஆடி வீற்றிருப்பவர். அடியார்கள் விரும்பும் (அகத்தியரால் பூஜிக்கப்பட்ட) சிவபெருமானும், திருமாலும், பிரமனும், (காஞ்சியில்) அறங்களை வளர்த்த கற்பக விருட்சம் போன்றவளும் (ஆகிய காமாட்சியும்), பூமியில் சிறப்பாகப் பூஜிக்கப் பட்டவளும் (ஆகிய பார்வதியும்) மகிழும்படி இருக்கும் அழிவில்லாத பெருமாளே, திருவண்ணாமலையில் எழுந்தருளும் தலைவனே, போர்க் களத்தில ஒப்பற்ற சூரர் தலைவனாகிய சூரபத்மன் (மாமரமாக வந்தபோது) விழும்படி முறித்து, மிதித்துக் கொன்று, தேவர்கள் பொன்னுலகுக்குக் குடியேறும்படி வாழவிட்ட சுவாமியே, அடியவரின் தம்பிரானே.
இப்பாடலின் முதல் 12 வரிகள் வேசையரின் இயல்பை வருணிக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 438 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - குத்தொகு, தொகுதொகு, தொகுத்தொ, தோதோ, தத்தன, தனத்த, தானா, தனதன, வளர்த்த, குத்திகு, தீதோ, தம்பிரானே, டுடுடுடு, ஆகிய, முறித்து, கற்பக, செககண, குச்செகு, செகுச்செ, சிரித்து, சேசே, தொந்ததீதோ, டுட்டுடு, துடுட்டு, டூடூ