பாடல் 436 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத் ...... தத்த தனதான |
போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப் பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும் போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத் தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத் த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித் தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித் தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட் சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற் றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும் ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக் காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித் தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச் சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச் சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே. |
விருப்பமான போகத்தை அளிக்கும் கற்பகமாகிய தெய்வ மரத்தையும், மேகத்தையும், பாரி வள்ளலையும், பொன் குவியலை உச்சி வேளையில் கொடுத்து வந்த தெய்வ மலரை வைத்திருந்த பிள்ளை (கர்ணனையும்) நிகர்ப்பாய் நீ என்று உவமை கூறி ஒப்பிட்டு, உலக மக்களை மெச்சி, அவர்கள் மீது அன்பைக் காட்டி, என் தரித்திரம் ஒழியும் பொருட்டு, கொடை பெரிதாக அவர்கள் தருவதற்காக, ஆசு கவிகள், நல்ல சித்திரக் கவிகள், வித்தாரக் கவிகள்* ஆகிய திருட்டுக் கவிதைகள் அவர்கள் மீது பாடி, அங்ஙனம் பொருள் தேடி, பிடித்தமான அழகிய மாதர்களுக்குத் தந்து, அவர்களுடைய சேல் மீன் போன்ற கண் வலையில் பட்டு நான் அடிமைப்பட்டு விடலாமோ? ஆகமங்களைக் கற்ற பக்தர்களும், வேதங்களைப் பயின்ற பரிசுத்தர்களும் ஒருங்கு கூடி விரும்பிப் பணி செய்ய, திருஅண்ணாமலையில் பொலிவுள்ள மதில்கள் சூழும் பொன் மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தின் வடக்குப் பக்கத்தில், வெற்றி விளங்கும் தோகைக் குதிரையாகிய மயில் மீது வீற்றிருப்பவனே, மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்ட சிவ பெருமானுக்கு (திரிபுர சம்ஹாரத்தின் போது) ஒரு அம்பாயிருந்த திருமாலின் அம்பறாத்தூணியாகிய கடல் அடியோடு வற்றும்படியும், திசைகளில் எழுந்துள்ள கனமான, ஒளி வீசும் எட்டு மலைகளும் உதிர்ந்து தூளாகி அமிழும்படியும், சூரன் மீது பட்டு உருவும்படியும் வேலைச் செலுத்திய பெருமாளே.
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 436 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, பட்டு, தானனத், தத்ததனத், அழகிய, மிக்கது, கவிதைகள், மயில், பொன், விடலாமோ, பெருமாளே, தெய்வ, கவிகள்