பாடல் 435 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஸிந்து
பைரவி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன் பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன் புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன் நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி நெறியி லாத வேமாளி ...... குலபாதன் நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல் நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள் சிதையு மாறு போராடி ...... யொருசீதை சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு திறமி யான மாமாயன் ...... மருகோனே அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி அமர தாடி யேதோகை ...... மயிலேறி அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும் அருணை மீதி லேமேவு ...... பெருமாளே. |
கீழ்மகனாக மிகவும் இழிந்தவன், தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன், பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன் முழு முட்டாள், புகழில்லாத வெறும் டாம்பீகன், அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக் கபோதி, ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன், ஒரு நிலையில் நிற்காத கோணங்கி, ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன், நல்லொழுக்கம் இல்லாத பேதை, நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான் உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக. வில்லினின்றும் அம்பைச் செலுத்தி பகைவன் ராவணனுடைய தோள்கள் அறுபடும்படிப் போரிட்டு, ஒப்பற்ற சீதையைச் சிறையிலிருந்து விடுவித்து இவ்வுலகிலேயே மிக்க சாமர்த்தியசாலியாக விளங்கிய ராமனாக வந்த மகா மாயன் திருமாலின் மருமகனே, மேரு மலை அலைச்சலுறவும், பெருஞ் சூரர் பொடிபடும்படியாகவும் வேலினைச் செலுத்தி போர் புரிந்து, கலாப மயில் மீதில் நிரம்ப தேவர்கள் புடை சூழ, உலகில் புகழ்ந்து பேசப்படும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 435 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதி, என்பதே, தானான, இல்லாத, செலுத்தி, நான், மேரு, மாறு, தகிட, பெருமாளே