பாடல் 432 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தான தனதன தத்தம் ...... தனதான |
பாண மலரது தைக்கும் ...... படியாலே பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான் சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே. |
மன்மதனது மலர்ப் பாணங்கள் தைக்கும் காரணத்திலாலும், பாவி இளம் பிறை வீசுகின்ற நெருப்பாலும், (என்) மானத்தைக் கெடுக்கும் வகையில் கூவுகின்ற குயிலாலும், நானும் காம மயக்கத்தால் இளைத்துப் போதல் நியாயமோ தான்? விண்ணுலகத்தில் இருக்கும் பெண்ணைத் (தேவயானையை) அணைக்கும் அழகிய மார்பனே, தேவர்கள் அடிபணிவதால், அவர்களுடைய மகுடங்களின் நறுமணம் வீசும் திருக் கழலை உடைய வீரனே, யாவரும் காணும்படி திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் ஒளி வீசும் வேலனே, யமனுடைய முதுகு விரியும்படி அவனை விரட்டி விலக்கும் பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், மலர் அம்பு, குயிலின் ஓசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 432 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வீசும், பெருமாளே, பாவி, தைக்கும்