பாடல் 431 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த ...... தனதான |
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப வீர பத்ர கந்த ...... முருகோனே மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே. |
மன நோயைத் தரும் பெரிய மார்பகங்களைக் கொண்டு நடமாடும் விலைமாதர்கள் பொருட்டு என் மனம் அழிவுறாமல், சூலை என்னும் கொடிய வயிற்று நோய், சுரம், மிக்க வாத நோய், பித்த நோய் என்னும் பெயருடன் சூழ்கின்ற நோய்க் கூட்டங்கள் என்னைப் பீடிக்காமல், பாதகனாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது வந்து என்னைப் பாசக் கயிற்றை வீசி என்னுயிரைப் பிடியாமல், நக்கீரருக்கு* இரக்கம் காட்டிய தேவனே, புலவர்கள் பாராட்டும் நல்ல பாடல்களையும், செவ்விய சொற்களையும் எனக்குத் தந்து அருள வேண்டும். வேதங்களால் பாராட்டப்பட்ட விந்து, நாதம் (லிங்கம், சிவசக்திப் பீடம்) எனப்படும் மூலப் பொருளே, கடம்ப மாலை அணிந்தவனே, வீரனே, அழகனே, கந்தனே, முருகோனே, மேருவைப் போன்ற கிரெளஞ்சத்தைப்) பிளந்து, சூரனை அழித்து, கடலில் குளித்தெழுந்த ஒளி வீசும் வேலாயுதனே, அழகிய குறிஞ்சிநிலப் பெண்ணாகிய வள்ளியின் கச்சணிந்த இளம் குரும்பை போன்ற மார்பகங்களை அணைந்தவனே, அழகு நிறைந்து விளங்கும் சோணகிரி என்னும் திரு அண்ணாமலையில் உயர்ந்த கோபுரத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே.
* நக்கீரர் சிறையிடப்பட்டு, பூதத்தால் துன்புறுத்தப்பட்டபோது, அவரது படைப்பாகிய திருமுருகாற்றுப்படையை (சங்க இலக்கியங்களுள் தலையானது) கேட்டு மகிழ்ந்து அவரை முருகன் சிறை விடுவித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 431 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நோய், தத்த, என்னும், தந்த, மிக்க, என்னைப், மீது, பெருமாளே, விந்து, சூலை, பித்த, கச்ச, முருகோனே