பாடல் 430 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -
..........; தாளம் -
தானன தான தத்த தானன தான தத்த தானன தான தத்த ...... தனதான |
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு தேனளி சூழ மொய்த்த ...... மலராலே சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த பூவையை நீய ணைக்க ...... வரவேணும் மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள் வாரண மான தத்தை ...... மணவாளா மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில் வேலடை யாள மிட்ட ...... பெருமாளே. |
ஒளி உடையதாய், நறுமணம் கொண்டதாய், விநோதமான இசையை விரும்பும் தேனீக்கள் சூழ்ந்து மொய்ப்பதான பூக்களாலும், கோபித்து எழும் பாம்பின் பற்களில் ஊறிய விஷத்தைக் கக்குகின்ற குளிர்ந்த நிலா வீசும் கதிர்களின் நெருப்பாலும், தாமரைப்பூவில் வீற்றிருக்கும் நீதி* இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல், பலவித இன்பங்களையும் நிறையத் தந்து, (உன் மீது) காதல் ஆசை மிக்குள்ள இந்தப் பெண்ணை நீ அணைக்க வர வேண்டும். கங்காதேவியை சடையில் தரித்த தலைவனான சிவபெருமானும், போற்றப்படுகின்ற மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமாலும் விரும்புகின்ற வேலாயுத வீரனே, தேவர்களுடைய சேனை எல்லாம் சூழ்கின்ற இந்திரனுடைய தலைநகர் அமராவதியில் (ஐராவதம் என்னும்) யானையால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானைக்கு கணவனே, உலகத்தில் உள்ளவர்கள் செழிப்புற வாழ திருவண்ணாமலையின் தெருக்களில் விரும்பி வீற்றிருக்கும் முருகனே, மேரு மலையை பொடியாக்கி, பிரமனுடைய காலில் வேல் கொண்டு விலங்கிட்ட பெருமாளே.
* நீதியற்ற வேதன் - தான் படைத்த திலோத்தமை மீது காதல் கொண்டு, அவளைப் பார்க்க அந்தத் திசையின் பக்கம் தனக்கு ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டான். ஆதலால் பிரமன் நீதி அற்றவன் ஆனான்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மலர்கள், மன்மதன், மலர்க் கணைகள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 430 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, தத்த, தானன, கொண்டு, வீற்றிருக்கும், காதல், சேனை, நீதி, பச்சை, பெருமாளே