பாடல் 425 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - தேஷ்;
தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதன தனனாத் தனதன தனனத் தனதன தனனாத் தனதன தனனத் தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான |
செயசெய அருணாத் திரிசிவ யநமச் செயசெய அருணாத் திரிமசி வயநச் செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா செயசெய அருணாத் திரியந மசிவச் செயசெய அருணாத் திரிவய நமசிச் செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி செயசெய அருணாத் திரிதனின் விழிவைத் தரகர சரணாத் திரியென உருகிச் செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச் சிவசிவ சரணாத் திரிசெய செயெனச் சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத் திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ செயசெய சரணாத் திரியென முநிவர்க் கணமிது வினைகாத் திடுமென மருவச் செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க் கடிதலை தெரியாப் படிநிண அருணச் சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே செயசெய சரணாத் திரியெனு மடியெற் கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற் றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக் குறமகள் முலைமேற் புதுமண மருவிச் சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே. |
அஜயஜெய அருணாசலா, சிவயநம,*1 அஜயஜெய அருணாசலா, மசிவயந,*2 அஜயஜெய அருணாசலா, நமசிவய*3, மூலப் பொருளே, அஜயஜெய அருணாசலா, யநமசிவ*4, அஜயஜெய அருணாசலா, வயநமசி*5, அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து என்று மாறி மாறிச் செபித்து, ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து, ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து, ஜெய ஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து, திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ? ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள் இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட, தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் என்னும் மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே, திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே, ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு, எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில் திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே, விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து, சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே.
*1 'சிவயநம' என்பது வேதாகமப்படியான பஞ்சாட்சரம்.
*2 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'மசிவயந'.
*3 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'நமசிவய'.
*4 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'யநமசிவ'.
*5 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'வயநமசி'.மீண்டும் கடைசி அட்சரத்தை முதலாக வைத்தாம் 'சிவயநம' என்ற பஞ்சாட்சர சக்கரம் தொடர்ந்து மாறி மாறி வரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 425 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - செயசெய, அருணாத், திருவடி, தனதன, அருணாசலா, அஜயஜெய, மலையே, கடைசி, முதலாக, வந்தால், வருவது, மந்திரத்தில், அட்சரம், சரணாத், ஜெயஜெய, போலவும், கூறி, மாறி, திடுமென, தனனத், தனனாத், சிவயநம, அழகிய, சிவசிவ, திரிசிவ, ஆகிய, திரியென, மருவிச், எனக், மகிழ்பொற், கண்ணை, பெருமாளே, என்னும், குரு, மீது, விளங்கும், மசிவயந