பாடல் 420 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான |
சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச் செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப் புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர் பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம் புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனே கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங் கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர் அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர் தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும் அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே. |
வில்லைப் போன்று வளைந்த நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டை இட்டு, குளிர்ந்த தாமரை போன்ற அழகிய முக வட்டத்தில் உள்ள மெல்லிய பூப் போன்ற மூக்கின் மேல் சார்ந்து செழுமையுள்ள ரத்ன மணி விளங்க, அழகிய குண்டலங்கள் உள்ள காதைக் கோபித்து, சிவந்து, விஷம் உண்ட தன் செயலுக்கு ஒப்ப வஞ்சகம் கொண்டு விளங்கும் கண்களால் சீறிக் கோபித்து, ஊடல் குணம் அதிகமாகி இருந்த விலைமாதர்களின் பாத மலரில் பணிந்து, அவர்கள் அணிந்துள்ள அணி கலன்களாய் விளங்கும் வளையல் கையில் கலின் கலென்று ஒலிக்க, காமப் பற்றான புகழ் நலச் செயல்களை அதிகமாகச் செய்து, அவர்களுடைய மார்பில் உருகித் தழுவி மிக்க ஆசையுடன் கலவி செய்தாலும், உனது அழகிய திருவடியை மனதில் மறக்க மாட்டேன். கலை கொண்ட பிறையை வைத்து அலங்கரித்த செந்நிறச் சடையுடன் ஹிமவான் மகளாகிய பார்வதி (இடது) பாகத்தில் அமர்ந்து விளங்க, கணகண கட்கட் கணின்கண் என்ற ஒலி செய்ய நடனம் செய்கின்ற கருணைப் பிரான், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகப்) பொருந்திய முக்கண்ணன் பெற்ற முருகனே, தினைப் புனத்தில் திரிந்த மெல்லிய கொடி போன்ற வள்ளியின் பருத்த மார்பாம் மலைகளில் சேர்ந்து அணைந்தருளிய புயங்கள் கொண்ட வீரனே, அலை கொண்ட கடலில் புகுந்து சண்டை செய்த பெரிய சேனையைக் கொண்ட அசுரர்களை வெட்டித் தொலைத்து வெற்றி கொண்டு, உயர்ந்த தேவர்கள் தொழும்படி அழகிய சதங்கை ஒலி செய்ய வருபவனே, அடியார்கள் பயத்தால் துன்புற்று ஒடுங்கும் வருத்தத்தை நீக்கி, அன்பு தரும் திருவண்ணாமலையில் சிறப்பாக வீற்றிருந்து அருளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 420 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, கொண்ட, தனதன, தனந்த, தத்தத், தந்தன, கோபித்து, விளங்க, விளங்கும், செய்ய, மெல்லிய, கொண்டு, சதங்கை, குளிர்ந்த, சிறந்த, சிவந்து, கணகண, பெருமாளே, கட்கட், உள்ள