பாடல் 419 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த தானதன தத்த தத்த ...... தனதான |
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார் கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு நீறெழமி தித்த நித்த ...... மனதாலே நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும் ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே. |
தந்தங்கள் பொருந்திய யானையின் மத்தகத்தில் வெளித் தோன்றும் பற்களை வெளியில் விழும்படித் தாக்கிக் கிழித்துக் கூறு படுத்தி அழித்து (அதன் தோலை) உரித்தவரும், நன்னெறியைப் போற்றாது விட்ட (திரிபுரத்து) அசுரர்களுடைய மேக மண்டலத்தின் மீது பறந்து செல்லும் முப்புரங்களை ஒளி வீசும் நெருப்பால் எரித்து விட்டவரும், கோபம் கொண்ட நெற்றிக் கண்ணினர் என்ற அந்த மேன்மையைக் கொண்டவருமான சிவபெருமானுடைய குரு நாதனே, பெரிய கனக கிரெளஞ்ச மலையைத் துளைத்து, பின்னும் உள்ள (ஏழு) மலைகளைத் தூளாகுமாறு மிதித்து விளையாடிய நித்தனே, கடப்ப மலரைச் சூடிய உனது புய வரிசையின் சிறப்பை மனதார நிரம்ப ஓதுகின்ற அடியார்களின் சித்தத்தில் உறைபவனே, நீல மயிலை வேகமாகத் தாவி வரச் செலுத்தி வந்தருள வேண்டுகிறேன். போரை மேற் கொள்ளும் அழகிய வில்லை ஏந்திய கைகளை உடைய வேடர்களின் தினைப் புனத்தில் இருந்த குறத்தியாகிய வள்ளியின் முத்து மாலை நிரம்பிய அழகிய மார்பின் மேல் விருப்பம் வைத்து, மிகவும் சிறந்த மணிகள் நிறைந்துள்ளதும், வெற்றி பெற்றனவுமாகிய பன்னிரண்டு திருப்புயங்களிலும் அவளை அணைந்த வீரனே, தேடி வந்த தேவர்கள் அறிவு நிரம்பி நீண்ட காலம் வாழ வேண்டுமென்றும் அவர்களது பக்தி சிறக்கவேண்டுமென்றும் மனதில் நினைத்த சிவ குமாரனே, செழிப்புள்ள திருவண்ணாமலையில் உள்ள மலையின் உச்சியிடத்தில் அடைந்து கூடிய தேவர்களின் சிறையை வெட்டி விட்ட பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 419 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, விட்ட, தானதன, மெத்த, உள்ள, அழகிய, பெருமாளே, வெற்றி, பத்தி, ரித்த, வெட்டி