பாடல் 421 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஆபோகி;
தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான |
சிவமா துடனே அநுபோ கமதாய் சிவஞா னமுதே ...... பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய் திசைலோ கமெலா ...... மநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே ...... மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே யியல்வே லுடன்மா ...... அருள்வாயே தவலோ கமெலா முறையோ வெனவே தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத் தலைதூள் படஏழ் கடல்தூள் படமா தவம்வாழ் வுறவே ...... விடுவோனே கவர்பூ வடிவாள் குறமா துடன்மால் கடனா மெனவே ...... அணைமார்பா கடையேன் மிடிதூள் படநோய் விடவே கனல்மால் வரைசேர் ...... பெருமாளே. |
சிவம் என்கின்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி கொண்டவனாக, சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு அதனால் அறிவுப் பசி தீர்ந்து, விளங்கும் 'தலைவன் - தலைவி' என்ற ஈருருவமும் ஒரே உருவமாய் எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன் இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி, இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற, வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற, சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக. மிகவும் உலகங்கள் யாவும் இது முறையாகுமா என்று ஓலமிட, நெருப்பை வீசும் வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி, ஏழு கடல்களும் தூள்படும்படி, சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு அந்த வேலைச் செலுத்தியவனே, மனம் கவரும் மலரின் அழகுடையவளும், குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம் ஆசை கொள்வது உன் கடமை என்று அவளை அணைந்த மார்பனே, கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும், என் நோய் தொலையவும் (அருளி), அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 421 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, பெருமாளே, கமெலா