பாடல் 417 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானதன தானதத்த தானதன தானதத்த தானதன தானதத்த ...... தனதான |
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று கேவலம தானஅற்ப ...... நினைவாலே கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில் மேதினியெ லாமுழற்று ...... மடியேனை வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த நீலநிற மால்தனக்கு ...... மருகோனே சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள் சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே. |
தாழம்பூவை அணிந்துள்ள பொது மகளிர்களுடைய மோகத்தில் ஈடுபட்டு, தாழ்மையான அற்ப நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடம் தராது இருக்கும் ஊழ் வினையாலும், மிக்க அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும், வேதனையில் பட்டு, மிக்க பாதகத்துக்கு இடம் தருபவனாக, வீணாக உலக முழுமையும் அலைச்சல் உற்றுத் திரியும் அடியேனுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்து உதவி, என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றி வேலைத் திருக் கரத்தே எடுத்து, விளங்குகின்ற மயிலின் மீது ஏறி வருவாயாக. நீதி நெறிகளை அழித்த தாரகாசுரனை வேரோடே அறுத்து, பெரும் புகழைக் கொண்ட தேவர்கள் தத்தம் வீடுகளில் குடிபுக, பெருங் கருணையால் உதவிய இளங் குமரனே, செழிப்புள்ள நீல நிறம் உள்ள திருமாலுக்கு மருகனே, ஜோதி நெருப்பாகத் தோன்றிய அருணாசலம் என்னும் சிறந்த மலைக்குள் அழகான வடக்குக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, விடாது பெய்யும் பெரு மழையைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்து போகும்படி, வெற்றி பொருந்திய தோளின் மீது வாளாயுதத்தை எடுத்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 417 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தானதத்த, வெற்றி, மீது, இடம், பெருமாளே, மிக்க