பாடல் 410 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தந்தனம் தனதன தனதன தனன தந்தனம் தனதன தனதன தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான |
கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன மதன தந்திரங் கடியன கொடியன கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும் கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன் செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன தெனன தெந்தனந் தெனதென தெனதென ...... எனநாதம் தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது திருகு கின்றமங் கையர்வச மழிதலை ...... யொழிவேனோ மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை கலக லன்கலின் கலினென இருசரண் மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய் வலிய சிங்கமுங் கரடியு முழுவையு முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக சதத ளம்பணிந் ததிவித கலவியு ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து அருணை வந்துதென் திசைதனி லுறைதரு ...... பெருமாளே. |
கரிய நிறத்தைக் கொண்டவனவாய், அகன்று உள்ளனவாய், பேசுவது போலப் பொலிவு உள்ளனவாய், காம நூல்ளில் கூறப்பட்ட கடுமையும் கொடுமையும் உடையனவாய், காதில் உள்ள பொன் குண்டலத்தோடு போரிட வருவது போலவனவாய், வடவா முகாக்கினி படர்ந்துள்ள கடல் போலப் பரந்து அடர்ந்து தொடர்வனவாய், அக்கடலில் தோன்றும் விஷம் கலந்து பிரகாசித்துக் கொப்புளிப்பனவாய், அம்பை நின்று நின்று எதிர்ப்பனவாய், முற்றின தொழிலை உடையனவாய், இளைஞர்கள் முன்னிலையில் போரிடும் எண்ணத்தை மேற்கொண்டு தமக்குள்ளே கோபிப்பனவாய், களவும் வஞ்சக எண்ணமும் கொண்டு சுழன்று திரிகின்றனவாய், தெனன தெந்தனந் தெனதென தெனதென என்ற ஒலியை எழுப்பும் வண்டை வெல்வனவாய், அதையும் தன் உறு ஒளியால் அடக்குவனவாய், மருட்சியை ஊட்டும் கண்களைக் கொண்டு தம்மை அணைபவர்களின் உயிரைத் திருகிப் பறிக்கின்ற விலைமாதர்களின் வசத்தே அழிந்து போவதை ஒழிக்க மாட்டேனோ? பொருந்திய தண்டைகளும், கிண்கிணியும், சிலம்பும் இவை யாவும் கல கலன் கலின் கலின் என்று ஒலிக்கும்படி இரண்டு திருவடி மலர்களும் நொந்து நொந்து நடந்து அலைய, உருவமும் மிக மாறி*, வலிமை உடைய சிங்கமும், கரடியும் புலியும் வாழும் செழிப்பான தினை விளையும் புனத்தில் பரண் மேல் இருந்த வேடர் குலப் பெண்ணான வள்ளியை ஒப்பற்ற திருவுள்ளத்தில் விரும்பி, அவள் அருகே சென்று சேர்ந்து அவளுடைய சிறிய இரண்டு பாத தாமரைகளைப் பணிந்து, பல விதமான ஆடல்களில் மிகவும் மருட்சி பூண்டு அவளை மன மகிழ்ச்சியுடன் அணைபவனே, தேவர்கள் கூட்டமும் விண்ணுலகில் குடி போகவும், நொடிப் பொழுதில் அசுரர்கள் கூட்டமும் பொடிபட்டுப் போகவும் போர் செய்து, திருவண்ணாமலையில் வந்து தெற்குத் திசையில் வீற்றிருக்கும் பெருமாளே.
பாட்டின் முதல் பாதியில் விலைமாதர்களின் கண்கள் வர்ணனை கூறப்பட்டுள்ளது.
* முருகன் வள்ளியை நாடிச் சென்றபோது வேடன், வேங்கை மரம், விருத்தன் என்று பல வேஷங்கள் தரித்ததைக் குறிக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 410 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தெனதென, தந்தனம், இரண்டு, கலின், நொந்து, வள்ளியை, கூட்டமும், விலைமாதர்களின், போகவும், உடையனவாய், தெந்தனந், தெனன, பெருமாளே, உள்ளனவாய், நின்று, போலப், கொண்டு