பாடல் 411 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - மோஹனம்;
தாளம் - அங்கதாளம் - 16
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தானான தான தானான தான ...... தந்ததான |
காணாத தூர நீணாத வாரி காதார வாரம ...... தன்பினாலே காலாளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல் நாணான தோகை நூலாடை சோர நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே நானாப வாத மேலாக ஆக நாடோறும் வாடிம ...... யங்கலாமோ சோணாச லேச பூணார நீடு தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா தோலாத வீர வேலால டாத சூராளன் மாளவெ ...... குண்டகோவே சேணாடர் லோகம் வாழ்மாதி யானை தீராத காதல்சி ...... றந்தமார்பா தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே. |
கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து ஓயாத அலையோசை உள்ள கடலின் வதைக்கின்ற ஆரவாரமும், அதன் பின்பாக, தென்றற் காற்றை தேர்போல் கொண்ட மன்மதனும், கடலில் பிறந்த விஷத்தை உண்ட சிவன்காலால் தேய்த்த நிலவும்*, இவளைக் கோபிக்க, இந்தப் புவி மீது நாணம் கொண்ட மயில் போன்ற இப்பெண் நூல் புடைவை நெகிழ, நாட்டில் உள்ளோர் பழித்துரைக்க, அதனால் உள்ளம் அழிந்து அவளே பலவித அவதூறுகள் மேலெழுந்து வெளிப்பட, நாள்தோறும் வாட்டமடைந்து மயங்கலாமோ? சோணாசலம் என்ற திருவண்ணாமலை ஈசனே, அணிந்துள்ள கடம்பமாலை பன்னிரண்டு தோளிலும் விளங்குகின்ற நாதனே, தோல்வியே அறியாத வீரனே, உனது வேலைக் கொண்டு, தகாத செயல் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் மாளும்படியாக கோபித்துச் செலுத்திய தலைவனே, விண்ணுலகில் வாழ்ந்த மாது தேவயானையின் நீங்காத காதல் நிறைந்த மார்பை உடையவனே, தேவர்கள் முதலியோர் மூன்று எனக் கூடிய ஆதி மும்மூர்த்தியர், மற்றும் தேவர்களுக்கு அதிதேவர்களாய் உள்ள இந்திரர்களுக்குத் தலைவனே.
* தக்கன் யாகத்தில் சிவனுடைய அம்சமான வீரபத்திரர் சந்திரனைக் காலால் துகைத்தார் - சிவபுராணம்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 411 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, உள்ள, கொண்ட, தேவர்கள், தலைவனே, தேவாதி, தகதிமி, காலால், தகதகிடதகிட