பாடல் 41 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா |
கரிக்கொம்பந் தனித்தங்கங் குடத்தின்பந் தனத்தின்கண் கறுப்புந்தன் சிவப்புஞ்செம் ...... பொறிதோள்சேர் கணைக்கும்பண் டுழைக்கும்பங் களிக்கும்பண் பொழிக்குங்கண் கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் ...... குழையாடச் சரக்குஞ்சம் புடைக்கும்பொன் றுகிற்றந்தந் தரிக்குந்தன் சடத்தும்பண் பிலுக்குஞ்சம் ...... பளமாதர் சலித்தும்பின் சிரித்துங்கொண் டழைத்துஞ்சண் பசப்பும்பெண் தனத்துன்பந் தவிப்புண்டிங் ...... குழல்வேனோ சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ் செழுத்தின்பங் களித்துண்பண் சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ...... கசுராரைத் துவைத்தும்பந் தடித்துஞ்சங் கொலித்துங்குன் றிடித்தும்பண் சுகித்துங்கண் களிப்புங்கொண் ...... டிடும்வேலா சிரப்பண்புங் கரப்பண்புங் கடப்பந்தொங் கலிற்பண்புஞ் சிவப்பண்புந் தவப்பண்புந் ...... தருவோனே தினைத்தொந்தங் குறப்பெண்பண் சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ் செழிக்குஞ்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே. |
யானையின் கொம்பு போலவும், ஒப்பற்ற தங்கக் குடம் போலவும் தோன்றி, இன்பம் தரும் மார்பகத்தின் இடத்தே கரு நிறத்தையும் செந்நிறத்தையும், செவ்வரியையும் உடையதாய், தோளை எட்டும் அளவினதாக நீண்டதாய், அம்பும் முன்னதாக மானும் போன்றதாய், (பார்த்தவர்களின்) நற்குணத்தை அழிக்க வல்லதாகிய கண், சங்கு வெட்கி ஒளிந்து கொள்ளும்படியான கழுத்து, பொன்னாலாகிய காதணிகள் ஊசலாட, மாலைச் சரம் போலத் தொங்க விட்டுள்ள குஞ்சம் வெளிப்பட, பொன் ஆடையால் யானைத்தந்தம் (போன்ற மார்பை மூடும்படி) தரித்துள்ள தமது உடல் தகுதியான நகைகளைக் கொண்டு ஆடம்பரமாக அலங்கரித்துள்ள விலைமாதர்கள். முதலில் சலித்தும் பிறகு சிரித்தும், (வந்தவரை) அழைத்துச் சென்றும், சார்ந்து பசப்பியும், பொது மகளிரின் மார்பகத்தால் வரும் துன்பம் கொண்டு தவித்து இந்த உலகில் திரிவேனோ? தேவர்களின் கூட்டம் துதி செய்த அந்த ஐந்தெழுத்தால் (நமசிவாய மந்திரத்தால்) வரும் இன்பத்தில் மகிழ்ந்து, உண்ணுதல், இசை பாடுதல் ஆகிய சுகத்தில் திளைத்து வாழ்ந்த இன்ப வாழ்வை அழியும்படி செய்த காரணத்தால், அங்கு அசுரர்களை மிதித்துக் கசக்கி பந்தடிப்பது போல் அடித்தும், வெற்றிச் சங்கை ஒலித்தும், கிரெளஞ்ச மலையைப் பொடி செய்தும், இசையோடு மகிழ்ந்தும் கண் களிப்புக் கொண்ட வேலனே, உன்னை வணங்குவதால் தலை பயன் பெறுதலையும், உன்னைக் கைகூப்பித் தொழுதலால் கைகள் பயன் அடைவதையும், கடப்ப மாலை சூட்டுதலைக் கண்டு சிவமாகும் தன்மை பெறுதலையும், தவ நிலை அடைதலையும் கொடுப்பவனே, தினைப் புனத்துத் தொடர்புடைய குறப் பெண்ணாகிய வள்ளி, சீர் நிறைந்த இந்திராணியின் மகளான தேவயானை ஆகிய இருவர்களின் மார்பகங்களில் துயில் கொள்ளும் பெருமாளே, செழிப்பான திருச்செந்தூரில் உறையும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 41 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந்தம், பெருமாளே, பயன், பெறுதலையும், ஆகிய, வரும், போலவும், கொண்டு, செய்த