பாடல் 403 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனதனன தனதனன தான தத்த தந்த தனதனன தனதனன தான தத்த தந்த தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான |
இருளளக மவிழமதி போத முத்த ரும்ப இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள் இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும் எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும் முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக அருளுமரி திருமருக வார ணத்தை யன்று அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே. |
கரிய கூந்தல் அவிழ, சந்திரனைப் போன்ற முகத்தில் உண்டான முத்துப் போன்ற வேர்வை வெளித்தோன்ற, விளங்கும் கயல் மீன் போன்ற கண்கள் புரள, இரண்டு கனத்த அழகிய மார்பகங்கள் நெகிழ்ச்சியுற, இடுப்பு துவள, கை வளையல்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்க, யாராலும் எழுதுதற்கு முடியாததான அழகிய ஆடை தளர்ச்சி உற, ஆசை அதிகரிக்க, தொப்புளாகிய இனிமை தரும் சுழி போன்ற மடுவில் (நீர் நிலையில்) முழுகி, நட்பு பூண்டு, அந்த வாயிதழ்களின் அமுதத்தை உண்டு, உயிரும் உடலும் ஒன்று போல ஒத்திருந்து, கோபம் வெறுப்பு எல்லாம் தணிந்து, நறு மணம் வீசுகின்ற மலர்ப் படுக்கையின் மீது படுத்து, முகமாகிய தாமரை கூம்ப, காம ஆசை கொண்டு அதில் அழிந்து, பேச்சு தடுமாற, தன் வசம் கெட்டழிய, அந்த ஆசையில் கவிழ்ந்து முழுகி விட்ட சமயத்திலும் கூட, எல்லாம் உணரும்படியான முற்றிய சிறந்த தவ நிலையில் உயர்ந்ததும் குற்றம் இல்லாததுமான வேதத்தில் நெருங்கி விளங்குபவன் என்று விரும்பிப் போற்றி செய்து நின்று முனிவர்களும் தேவர்களும் வணங்கி உருகும் உனது தாமரைத் திருவடிகளை என்றும் மறக்க மாட்டேன். ஒப்பற்ற சிறுவனான நம்பியூரன் என்னும் சுந்தர மூர்த்திக்குத் திருமணச் சடங்கு செய்யப்படும் சமயத்தில், களைத்து வந்து ஒரு கிழ உருவம் கொண்டு வேகமாக முன் வந்து, (மண) வாசலில் புகுந்து உலகோர் யாவரும் அறியும்படி இந்தச் சிறுவன் (எனக்கு) அடிமையாம் என்று (ஒரு ஓலையைக்) கொண்டு வந்துசபையோர்களின் மத்தியில் அறிவிக்க, ஒரு பழைய ஓலையில் எழுதப்பட்டு மடிந்து வைத்திருந்த பத்திரம் ஒன்றை வலிமையுடன் அந்தச் சிறுவன் வேணுமென்றே பற்றிக் கிழித்தெறிய, (அப்போது கை கால்களை) உதறிக் கொண்டு இது முறையோ என்று கூச்சலிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்த முதல்வருமான சிவபெருமான் பெற்றருளிய குழந்தையே, அருமையான சந்திரனை தூணாக இருக்கும்படிச் செலுத்தி வைத்து, பொன் மலையாகிய மேரு மலையை மத்தாக வைத்து, ரத்தின முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி, அழுத்தமாக தேவர்களோடு பலரும் விரைவுடன் பாற்கடலைக் கடைந்து (இறுதியில்) அமுது வரச் செய்து, அதனை (தேவர்களுக்குப்) பகிர்ந்து அளித்த திருமாலின் மருகனே, சேவலை அன்று முன் யோசனையுடன் ஒரு கொடியில்* நிறுத்தி மகிழ்ந்து, திரு அண்ணாமலையில் கோபுர வாயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
* சூரனுடைய உடல் வேலால் பிளவுபட, ஒரு கூறு மயிலாகவும், மற்றொரு கூறு சேவலாகவும் முருக வேளை எதிர்த்து வர, அவர் அருள் கண்ணால், மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆயின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 403 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தந்த, கொண்டு, நின்று, வந்து, தத்த, கூறு, எல்லாம், செய்து, முன், அந்த, சிறுவன், வைத்து, அழகிய, ரித்து, குந்து, ணத்தை, யன்று, நிலையில், பெருமாளே, முழுகி