பாடல் 398 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான |
இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க ...... வுளமகிழ்ச் சியினோடே இருவ ருடலுமொரு வுருவாய்ந யக்க முகமே லழுந்த அளக மவிழவளை களுமேக லிக்க நயனா ரவிந்த லகரி பெருகஅத ரமுமேய ருத்தி முறையே யருந்த ...... உரையெழப் பரிவாலே புருவ நிமிரஇரு கணவாள்நி மைக்க வுபசா ரமிஞ்ச அவச கவசமள வியலேத ரிக்க அதிலே யநந்த புதுமை விளையஅது பரமாப ரிக்க இணைதோ ளுமொன்றி ...... அதிசுகக் கலையாலே புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க மனமு மனமுமுரு கியெயாத ரிக்க வுயிர்போ லுகந்து பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமா தர்சிங்கி ...... விடஅருட் புரிவாயே பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த தமர திமிரபிர பலமோக ரத்ந சலரா சிகொண்ட படியை முழுதுமொரு நொடியேம தித்து வலமா கவந்து ...... சிவனிடத் தமர்சேயே பழநி மிசையிலிசை யிசையேர கத்தில் திருவா வினன்கு டியினில் பிரமபுர மதில்வாழ்தி ருத்த ணிகையூ டுமண்டர் பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவா கிநின்று ...... கவிதையைப் புனைவோனே அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபா லனன்ப ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகா ரரென்ற அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிரா மசெந்தி ...... லுரகவெற் புடையோனே அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த இரண கரணமுர ணுறுஞ்ர னுட்க மயிலே றுகந்த அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த ...... அறுமுகப் பெருமாளே. |
சுவை கொண்டதும் இன்பம் தருவதுமான தனங்களும் மார்பில் அழுத்த, நெற்றியில் வேர்வை துளிர்க்க, காமம் பெருகும் நிலையிலே விரல்களின் நகக்குறி தைக்க, (அக்குறிகளில் கசியும் ரத்தம்) ரத்தினம் போல் ஒளி பெருக, அடிக்கடி பிணக்கு ஊடல் கொண்டு பிறகு மேல் விழும் கலவி லீலைகளை விளையாடி, நூல் போன்ற மெல்லிய இடை துவள, உள்ளத்தில் களிப்புடன் இருவர் உடலும் ஒன்றுபட்டு ஒருவராகி இன்பம் தர முகத்தின் மேல் முகம் அழுந்த, கூந்தல் அவிழ்ந்து விழ, வளைகள் ஒலிக்க, கண் என்னும் தாமரையில் மயக்கம் பெருக, வாய் இதழ் ஊறலை தக்கபடி உண்ண வேண்டிய முறைப்படி அருந்த, அன்பு காரணத்தால் சில சொற்கள் பேச, புருவம் மேல் எழ, இரு கண்களும் ஒளி வீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, தன்வசம் அழிதலானது மேற் போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக, அப்போது கணக்கற்ற புதிய உணர்ச்சிகள் தோன்ற, அவ்வுணர்ச்சியை நன்றாக அனுபவிக்க இரண்டு தோள்களும் ஒன்றிக் கலந்து, அதிக சுகமாகிய பகுதியால் புளகாங்கிதம் நிறைய, காமம் என்கின்ற கடல் ததும்பிப் பரவ, இடுப்பில் கட்டியுள்ள கயிறும் அரைஞாணும் ஒளி குறைந்து அறுபட, மனத்தோடு மனம் உருகி அன்பு மேற்கொள்ள உயிர் போல மகிழ்ந்து பாவித்து, பொருள் கிட்டும் வரையில் கலந்து களிக்கும் மாயவித்தை வல்ல பொது மகளிரின் விஷச் சூழலை விட்டொழிக்க அருள் புரிவாயாக. போற்றப்படும் மகர மீனும் சங்கும் கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதால் சாகரம் என்ற பெயர் கொண்டதாய், பேரொலி உடையதாய், இருள் நிறைந்ததாய், பிரசித்தி பெற்றதாய், கவர்ச்சி உள்ளதாய், ரத்தினங்களும் மணிகளும் கொண்டதாய் உள்ள கடல் சூழ்ந்த உலகை, முழுதும் ஒரு நொடிப் பொழுதில் அளவிட்டு வலம் வந்து (தந்தையாகிய) சிவபெருமானிடத்து அமர்ந்த குழந்தையே, பழநி மலை மீதும், புகழோடு கூடிய சுவாமி மலையிலும், திருவாவினன்குடியிலும், சீகாழியிலும், நீ என்றும் மங்கலமாய் வாழ்கின்ற திருத்தணிகையிலும் உறைவிடம் கொண்டவனே, தேவர்கள் உன்னைத் தரிசிக்க வருகின்ற அத்தலங்களில் எல்லாம் உறைபவனே, பழம் பொருளாகிய வீட்டின்பமானது இந்த அடிமைக்கும் கிட்டும்படியாக நின்று என் பாமாலையை அணிந்து கொள்பவனே, திருமாலும் பிரமனும் தேவர்களும் ஆகிய மேலோர்களைக் காத்து அருள்பவனே, உன் அடியார்கள் அடையும் துயரத்தை ஓட்டித் தூளாக்க, துஷ்டர்களான கொலைகாரர்கள் எனப்படும் அசுரர்களின் சேனையை முழுமையும் வேரறுத்த அழகனே, திருச்செந்தூர், நாகமலை என்ற திருச்செங்கோடு என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, செவ்விய ஒளி வீசுவதும் உனது கருணை பூரணமாக நிறைந்ததுமான திருவடியைப் பகைத்து மேலெழுந்த போர்க்குணம் கொண்டவனாய் மாறுபட்டு எழுந்த சூரன் அஞ்சும்படி மயிலின் மேல் ஏறிவரும் கந்தனே, திருவண்ணாமலையில் வாழும் சிவபெருமானுடைய திருக்கோயிலின் பெரிய கோபுரத்திற்கு வடதிசையில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
இந்தப் பாட்டின் முதல் 12 வரிகள் புணர்ச்சியை விவரிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 398 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மேல், தத்த, தனதான, ரிக்க, தனதனன, தனந்த, தனனா, என்னும், அன்பு, கொண்டதாய், கடல், கலந்து, பெருமாளே, தைக்க, பழநி, இன்பம், காமம், பெருக