பாடல் 396 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனனத் தனதானன தனனத் தனதானன தனனத் தனதானன ...... தனதான |
இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே இயலைத் தருகானக முயலைத் தருமேனியி லெரியைத் தருமாமதி ...... நிலவாலே தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை தொலையத் தனிவீசிய ...... கடலாலே துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர் துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை மடியச் சுடஏவிய ...... வடிவேலா மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள் மகிழப் புனமேவிய ...... மயில்வீரா அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய லருணைத் திருவீதியி ...... லுறைவோனே அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி அமரர்க் கரசாகிய ...... பெருமாளே. |
துன்பத்துக்கு மேல் துன்பம் தருவதான கொடிய (மன்மத) பாணங்களின் மேலே வந்து, அழிவைத் தரக்கூடிய சிறு தென்றல் காற்று வீசி வருகின்ற அந்தக் காரணத்தாலும், தகுதியைக் கொண்டதும், காட்டு முயல் போன்ற களங்கத்தினைக் கொண்டதுமான வடிவத்தில் இருந்துகொண்டு நெருப்பை வீசும் அழகிய சந்திரனுடைய ஒளியாலும், மேல் மேல் தொடர்ந்து வந்து கொடிய வேதனையை நான் அடையும்படி, கரையின் மீது அலைகள் பட்டு அழிய அந்த அலைகளை ஒப்பற்ற விதத்தில் வீசுகின்ற கடலாலும், ஒரு துணையும் இல்லாமல் அலங்கரித்த மலர்ப் படுக்கையில் தனிமையில் எனது உயிர் வாடுதல் தகுமோ? என் விரக வேதனை ஒழியாதோ? பொன் நிறைந்த வடமேரு மலை போல் விரைந்து சென்று சண்டை செய்த சூரனை இறந்து போகுமாறு சுட்டெரிக்கச் செலுத்திய கூரிய வேலனே, வேடர் குலத்தவளாகிய ஒப்பற்ற குறத்தியும், மெய்ம்மை திகழும் லக்ஷ்மியின் சிறந்த மகளுமான வள்ளி மகிழும்படி தினைப் புனத்துக்கு விரும்பிச் சென்ற மயில் வீரனே, நெருக்கமாய் வளர்ந்துள்ள தாழை மடலின் தழைகள் சேர்ந்த வயல்களை உடைய திருவண்ணாமலையின் தெருக்களில் வாழ்பவனே, உலகுக்கும், சிவனுக்கும், உமா தேவிக்கும், இமையாத விழிகளை உடைய தேவர்களுக்கும் அரசனாகிய பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.மன்மதனுடைய பாணங்கள், தென்றல் காற்று, நெருப்பை வீசும் நிலா, அலைகள் வீசும் கடல், மலர்ப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவுத் துயரை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 396 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், வீசும், மேல், தனதானன, அலைகள், ஒப்பற்ற, மலர்ப், உடைய, தென்றல், பெருமாளே, கொடிய, வந்து, காற்று, நெருப்பை