பாடல் 395 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் ...... தனதானா |
ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட் டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள் ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட் டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர் சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத் தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர் தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட் சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச் சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத் தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத் தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த் தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே. |
யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் ஒத்த கனமான மார்பகங்களைச் சார்ந்து அசைகின்ற பட்டு ஆடையால் மறைத்து ஆடுகின்ற, மலர் அணிந்த கூந்தல் உடையவர்கள், முத்து மாலையும் தோடும் மிக அசையப் பேசியும், இனிதாகச் சிரித்தும், பொன்னைப் பெற வேண்டி எவரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள், பெரும் மழைமேகம் போன்ற அடர்ந்த கூந்தலும், அழகிய விழியும் கொண்ட தோகை மயில் போன்ற சாதியர், தம் இடத்தே உள்ள தூதுவர்களை அனுப்பி, பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு* நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக. தானதனத்தீ என்று ஒலிக்கும் பறை வகைகள் முழங்க, நன்றாகக் கிரெளஞ்ச மலை அழிய, கடலில் ஒளிந்து நின்ற சூரனை வதைத்தவனே, தாளத்தின் இலக்கண விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியின் மூலம் உண்டாகும்படி, ஒரு பாதத்தை வளைத்து எடுத்தும், மற்றொரு திருவடியைப் பூமியில் வைத்தும் நடமிடும் சிவபெருமானுடைய ஒப்பற்ற குழந்தையே, தேனின் சாறு போல் இனிக்கும், கொவ்வைப் பழம் போலச் சிவந்தும் உள்ள வாயிதழைக் கொண்ட, நாகணவாய்ப் புள் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புக்கு மனம் உருகி அவளிடம் சேர்ந்து, அழகிய ஒளி வீசும் வேலை உடையவனே, அழகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த தினப் புன மயிலாகிய வள்ளிக்கும், (உன்னிடம்) மெய்யன்பு கொண்டிருக்கும் தேவயானைக்கும் ஒப்பற்ற கருணையைக் காட்டிய பெருமாளே.
* ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 395 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதனத், அழகிய, உள்ள, ஒப்பற்ற, கொண்ட, பட்டு, பெருமாளே