பாடல் 393 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனனா தனனத் தனனா தனனத் தனனதா தனனத் ...... தனதான |
அருமா மதனைப் பிரியா தசரக் கயலார் நயனக் ...... கொடியார்தம் அழகார் புளகப் புழுகார் சயிலத் தணையா வலிகெட் ...... டுடல்தாழ இருமா நடைபுக் குரைபோ யுணர்வற் றிளையா வுளமுக் ...... குயிர்சோர எரிவாய் நரகிற் புகுதா தபடிக் கிருபா தமெனக் ...... கருள்வாயே ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட் டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா உறைமா னடவிக் குறமா மகளுக் குருகா றிருபொற் ...... புயவீரா திருமால் கமலப் பிரமா விழியிற் றெரியா வரனுக் ...... கரியோனே செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் றிருவீ தியினிற் ...... பெருமாளே. |
அரியவனும் அழகனுமான மன்மதனை விட்டு அகலாத பாணங்கள் போன்றதும், கயல் மீன்போன்றதும் ஆகிய கண்களை உடைய பொல்லாதவர்களான விலைமாதர்களின் அழகிய, புளகாங்கிதம் கொண்ட, புனுகுசட்ட வாசனை பூண்ட, மலைகள் போன்ற மார்பகங்களை அணைந்து, வலிமை இழந்து உடல் நலிய, இருமலில் வீழும் தன்மை வந்து சேர, பேச்சு அற்று, உணர்வும் போய், இளைத்து, உள்ளம் மெலிந்து, உயிர் சோர்வுற்று, நெருப்பு கொளுத்தும் (கும்பிபாக)* நரகத்தில் புகாத வண்ணம், உனது இரு திருவடிகளை எனக்குத் தந்து அருளுக. ஒப்பற்ற பெரிய கிரெளஞ்ச மலையை சிறு தூளாகும்படிச் செய்து, பலத்துடன் செலுத்திய, அழகிய ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, மான்கள் வாழும் காட்டில் பெருமை வாய்ந்த குற மகளான வள்ளிக்கு உருகின பன்னிரண்டு திரண்ட தோள்களை உடைய வீரனே, திருமால், தாமரையில் வீற்றீருக்கும் பிரமன் ஆகிய இருவருக்கும் காணப் பெறாத சிவனுக்கும் அருமை வாய்ந்தவனே, செழுமை வாய்ந்த நீர் வயல்கள் சூழ்ந்துள்ள திரு அண்ணாமலையில் அகன்ற வீதிகளில் மகிழ்ச்சியுடன் உலாவரும் பெருமாளே.
* எரிவாய் நரகம்: கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களில் ஒன்று.பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம்.ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 393 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், அழகிய, வாய்ந்த, நரகம், உடைய, பெருமாளே, எரிவாய், திருமால், தனனா, ஆகிய